மணல் குவாரி விவகாரத்தில் தொடர்புடையோரை பாதுகாக்க தமிழக அரசு முயற்சி: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மணல் குவாரி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க தமிழக அரசு முயற்சிக்கிறது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கை தீர்ப்புக்காக செவ்வாய்க்கிழமைக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித் துறையில் பணியற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் சோதனை நடத்தினர்.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகியிருந்தார்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், "சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகார வரம்பு இல்லை. மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுகிறது" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், "சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக மாநில அரசே விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில், அமலாக்கத் துறை நடவடிக்கை எடுப்பது உள்நோக்கம் கொண்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாத அமலாக்கத் துறை தமிழகத்தில் இந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுத்துள்ளது. கனிமவள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாது. கனிமவள சட்டங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் வராது" என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில், “கனிமவள சட்டங்கள் குறித்த வழக்கை தற்போது அமலாக்கத் துறை விசாரிக்கவில்லை. இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில்தான் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உண்டு. இதை தமிழக அரசு தடுக்க முடியாது. தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் ரூ.4.500 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைக் கேட்டோம். ஆனால், டிஜிபி அலுவலகத்தில் இருந்து அதுகுறித்த விளக்கங்களை எங்களுக்கு வழங்கவில்லை. இதுவரை 4 முதல் தகவல் அறிக்கைகள் மட்டும்தான் கிடைக்கப்பெற்றுள்ளது. அமலாக்கத் துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு உதவும் வகையில்தான், இந்த ஆவணங்கள் கேட்கப்பட்டன. அதேபோல் சம்மனும் அனுப்பப்பட்டது" என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அனைத்து குவாரிகள் தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் எவ்வாறு கேட்க முடியும்? எந்தெந்த குவாரிகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதோ, அதன் விவரங்களை மட்டும் அமலாக்கத்துறை கேட்டுப் பெறலாம். இந்த விவரங்களை அரசோ, காவல் துறையோ வழங்க மறுத்தால் அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்து ஆவணங்களைப் பெறலாம்” என்றனர்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில், “ஒரு யூனிட் மணலுக்கு ரூ.1900 அரசுக்கு வந்தாலும், ரூ.20 ஆயிரம் வரை தனியாருக்கு செல்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை சேகரிக்கவே, இந்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது” என்று குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு தமிழக அரசுத் தரப்பில், “யாரையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த வழக்கை அரசு தொடரவில்லை. யாரையும் பாதுகாக்கவும் இல்லை. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதைவிடுத்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதும், சம்மன் அனுப்பியதும் தவறு” என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நாளைக்கு (நவ.28) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்