“சாக்கடை பிரச்சினையை தாங்க முடியவில்லை” - மதுரை மேயரிடம் குற்றம்சாட்டிய கவுன்சிலர்கள் வாக்குவாதம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘‘சாக்கடை பிரச்சினையை தாங்க முடியவில்லை’’ என்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் மேயரிடம் நேருக்கு நேராக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் திங்கள்கிழமை நடந்தது. ஆணையாளர் லி.மதுபாலன், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை மேயர் இந்திராணி வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது 11-வது தீர்மானமாக புதிய குடிநீர் குழாய், பாதாளசாக்கடை இணைப்புக்காக சாலைகளை தோண்டுவதால் சாலை சீரமைப்பு கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது என வாசித்தார். அதற்கு அதிமுக எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா மற்றும் அக்கட்சியின் கவுன்சிலர்கள் எழுந்து கடும் ஆட்சேபம் தெரிவித்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்றார்.

தொடர்ந்து சோலைராஜா கூறுகையில், ‘‘ஏற்கெனவே மக்கள் சாக்கடை வரி, குப்பை வரி, சொத்துவரி, மின் கட்டண வரி, விலைவாசி உயர்வால் பல மடங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சியால் சாலை, குடிநீர், சுகாதார அடிப்படை வசதிகளை கூட சரியாக செய்து கொடுக்க முடியவில்லை. ஆனால், இப்படி குடிநீர் வரியை உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நம்முடைய சுமையை மக்கள் மீது ஒட்டுமொத்தமாக இறக்கி வைக்கக்கூடாது,’’ என்றார். அதற்கு மேயர் இந்திராணி, ‘‘நகராட்சி நிர்வாகத்துறை அனுப்பிய சுற்றறிக்கை அடிப்படையில் சாலை சீரமைப்பு கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்துவது வழக்கமான நடைமுறைதான், ’’என்றார்.இதைத்தொடர்ந்து மாநகராட்சியில் நடந்த விவவாதம் வருமாறு:

1-வது மண்டலத்தலைவர் வாசுகி: மண்டலம்-2ல். உள்ள 15வது வார்டில் உள்ள பழனிசாமி நகரின் பாதாளசாக்கடை கழிவுநீர் 12,13 வார்டுகள் வழியாக காந்திபுரம் வரை செல்கிறது. பாதாளசாக்கடையில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் பக்கத்து மண்டல கழிவு நீர் எங்கள் மண்டல வார்டுகளில் கடந்த 6 மாதமாக ஓடுகிறது. மழைக்காலத்தில் வீடுகளில் புகுவதால் மக்கள் வசிக்க முடியவில்லை. மாநகராட்சி நகரமைப்பு துறை, கட்டிட அனுமதி பெற்றவர்களுக்கு கட்டிடம் முடித்த சான்றிதழ் (building completation certificate) கொடுக்கப்பதில்லை. அதனால், மக்கள், வணிகர்கள், பணி முடிந்த கட்டிடங்களுக்கு மின்சார இணைப்பு பெற முடியாமல் தவிக்கிறார்கள். கடந்த காலத்தைப்போல் அவர்களுடைய கட்டிட அனுமதியில் விதிமீறல் இருந்தால் அதற்கு தகுந்தார்போல் அபராதம் விதித்துவிட்டு கட்டிட முடித்த சான்றிதழ் வழங்க வேண்டும். தற்போது மாநகராட்சி நிலைபாடால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பும், மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

2-வது மண்டல தலைவர் சரவண புவனேஷ்வரி: 1-வது மண்டல எல்லையில் இருந்து 2-வது மண்டலத்துக்குட்பட்ட புதூர் வண்டி பாதை சாலை வரை பாதாளசாக்கடையில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ளது. புதூர் வண்டிப்பாதை பகுதியில் உள்ள பழனிசாமிநகர் மிகவும் தாழ்வானபகுதி. கடந்த ஒன்றரை ஆண்டாக வீடுகளில் கழிவுநீர் சென்றுவிடுகிறது. கழிவுநீர் தேங்கியதால் நேற்று வீட்டின் முன் காரத்திகை தீபம் ஏற்ற முடியாமல் மக்கள் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். மாநகராட்சி ஒப்பந்த நிறுவன பணியாளர்கள், பள்ளிகள், கோயில்கள், பொது இடங்களில் கூட பாதாளசாக்கடை, புதிய சாலைப்பணிகளுக்காக பள்ளங்களை தோண்டி சரியாக மூடாமல் அப்படியே போட்டு சென்றுவிடுகின்றனர். மழை பெய்தாலே பெரும் பிரச்சினை ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகள், பள்ளம், சாலை எதுவென்று தெரியாமல் மழைக்காலத்தில் பள்ளத்தில் விழுவதற்கு வாய்ப்புள்ளது.

90-வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜரத்தினம்: வில்லாபுரம் பகுதியில் உள்ள 5 வார்டுகளில் இந்த மழைக்காலத்தில் கூட 8 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு எப்போது தீர்வு காண்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அப்போது, குடிநீர் பிரச்சினையை பொறுத்துக்கொள்ள முடியாது. அதிகாரிகள் விரைவாக தீர்வு காண வேண்டும் என்று மேயர் இந்திராணி கூறினார்.அதற்கு பொறியில் பிரிவு அதிகாரிகள், ‘‘ஒரு நாளைக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து 35 லட்சம் லிட்டர் குடிநீர் வர வேண்டும். தற்போது அந்த தண்ணீர் குறைந்துவிட்டதால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கூடுதல் குடிநீர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், ’’ என்றனர்.

அப்போது சோலைராஜா, மாநகராட்சியின் 13 மழைநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரியிருந்தால் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்காது. தூய்மைப்பணி முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில் மாநகராட்சியிடம் உள்ள குப்பை அள்ளும் வாகனங்களை என்ன செய்யப்போகிறீர்கள்? என்றார். அதற்கு மாநகராட்சி தரப்பில், தனியார் நிறுனங்களிடம் மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு அதற்கான தொகை பெறப்படும் என்று பதில் அளிக்கப்பட்டது.பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் ஏப்போது நிறைவடையும்? அமைச்சர் நேரு சட்டசபையில் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என்று உறுதி கூறியிருந்தாரே? என்று எழுப்பிய கேள்விக்கு, முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் இருந்து மதுரைக்கு குழாய் பதிக்கும் பணி இன்னும் 1,200 மீட்டர் மட்டுமே பாக்கி உள்ளது. டிசம்பர் 20-ம் தேதிக்குள் தண்ணீரை மதுரைக்கு கொண்டு வந்துவிடுவோம் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திகேயன்: ஒப்பந்ததார்கள் சாலை பணிகளை தரமாக போடுவதில்லை. புதிதாகபோட்ட சாலையில் லாரிகள் பதிந்து சிக்கி கொள்கிறது. மக்கள் புதிய சாலையின் தரத்தை கேள்வி எழுப்பி நீதிமன்றத்தை அனுகி உள்ளனர். ஒப்பந்ததார்கள் செய்யும் தவறுக்கு மக்களிடம் மாநகராட்சியும், கவுன்சிலர்களும் கெட்டப்பெயர் வாங்க வேண்டியதாக உள்ளது. விரைவில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஒப்பந்ததார்கள் மேற்கொள்ளும் பணிகளை கண்காணித்து தரமாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

96-வது சிபிஎம் கவுன்சிலர் விஜயா: சாலையோர வியாபாரிகளுக்கு இன்னும் மாநகராட்சி அடையாள அட்டை வழங்கவில்லை. அவர்கள் அடித்தட்டு மக்கள். அதிகாரிகளை போல் ஏசி அறையில் அமர்ந்து வேலைபார்க்கக்கூடியவர்கள் அல்ல. 5-வது மண்டலம் அனாதை மண்டலமாக மாறிவிட்டது. தெருவிளக்குகள் போடாமல் நகருக்கு மத்தியில் தனித்தீவு போல் இந்த மண்டலம் உள்ளது. இப்பகுதி பாதாளசாக்கடை பிரிட்டீஷ் ஆட்சியில் 90 ஆண்டுக்கு முன் போடப்பட்டவை. அவற்றை பராமரிக்காமல் விட்டதால் கழிவு நீர் பொங்குகிறது. மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்பதால் என்னுடைய 96-வது வார்டு திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறதா? என்றார்

44வது வார்டு மதிமுக கவுன்சிலர் தமிழ்செல்வி: சாக்கடை பிரச்சினையை தாங்க முடியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் பாதாளசாக்கடை கழிவு நீர் பொங்கி தெருக்கள், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தீபாவளி நேரத்தில்தான் தெரிந்தது! - 54-வது வார்டு கவுன்சிலர் நூர்ஜகான் பேசுகையில், ‘‘தீபாவளி நேரத்தில் மாநகராட்சி பணியாளர்கள் என்னை தேடி வரும்போதுதான் எத்தனை பணியாளர்கள் பணிபுரிகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். இவ்வளவு பணியாளர்களை நானே வார்டில் பார்த்ததில்லை. பணியாளர்கள் சரியாக பணிக்கு வராமல் ஏமாற்றுகிறார்கள், ’’ என்றார். அதற்கு மேயர் இந்திராணி, ‘‘அனைத்து வார்டுகளில் ஒரு முறை கவுன்சிலர் முன்னிலையில் அந்த வார்டில் பணிபுரியும் பணியாளர்களை வரவழைத்து அணிவகுப்பு நடத்தி அவர்கள் விவரங்கள் தெரிவிக்க ஏற்பாடு செய்கிறேன், ’’என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்