தானாக செல்லும் நீரை இறைத்து காசு பார்க்கும் ஒப்பந்ததாரர்கள்: விரயமாகும் சென்னை மாநகராட்சி நிதி

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் வெள்ளமும், நீர்த்தேக்கமும், வறட்சியும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. எது நடந்தாலும் அதை எதிர்கொள்ள மக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளனர். மழை வெள்ளம், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது என்றால், அதற்கெல்லாம் தற்போது மக்கள் கவலைப்படுவதே இல்லை. அதற்கேற்றவாறு தங்கள் வீட்டு கட்டமைப்பை அமைத்துக்கொண்டு, நீரால் பாதிக்கப்படக்கூடிய பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துவிடுவது, கட்டில் மற்றும் சமையலறையை உயரமாக அமைத்துக்கொள்வது, காஸ் சிலிண்டர்கள் நீரில் மிதக்கும் என்பதால் அதற்கும் உயரமான நாற்காலியை வாங்கி வைத்துக்கொள்வது, நுழைவு வாயிலை உயரமாக அமைத்துக்கொள்வது என வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன் பெற்றவர்களாக சென்னை மக்கள் மாறிவிட்டனர்.

புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் இந்த வசதிகளை பார்க்கலாம். வீட்டில் 2 அடிக்கு மேல் நீர் தேங்கி இருந்தாலும், அதிலேயே நடந்து செல்வது, சமைப்பது என அங்கேயே வாழவும் அவர்கள் பழகிவிட்டனர். வறட்சி என்றாலும் குடங்களுடன் சாலைக்கு வந்து லாரி குடிநீர் பிடிக்கவும் தயாராக உள்ளனர். சென்னையில் மழை காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதும், அதை வெளியேற்றநீர் இறைக்கும் மோட்டார்களைமாநகராட்சி பயன்படுத்துவதும் மாநகரின் வடகிழக்கு பருவமழைக்கால அடையாளமாகவே மாறிப்போய்விட்டது. வழக்கமாக சுமார் 700 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் டீசல் இன்ஜின்கள், டிராக்டரில் பொருத்தப்பட்ட நீர்இறைக்கும் இயந்திரங்கள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.

ஒரு மணி நேரத்துக்கு ரூ.840: இந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் நீரை வெளியேற்ற 150 டிராக்டர்களை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. 4 அங்குலம் விட்டம் கொண்ட குழாய் மூலம் நிமிடத்துக்கு 800 லிட்டர் நீரை வெளியேற்ற வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு நீரை வெளியேற்றினால் ரூ.840 வழங்கப்படும். டிசம்பர் மாதம் வரைமழை இல்லாத நாட்களில் நாளொன்றுக்கு ரூ.700 வழங்கப்படும் என்ற நிபந்தனைகள் அடிப்படையில் இந்த டிராக்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இதில் டிராக்டர் இயக்கும் சிலர், மழை நீர் வடிகால்களில் தானாக செல்லும் நீரை மோட்டார் மூலம் இறைத்து கணக்கு காட்டி வருவாய் ஈட்டி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மாநகராட்சி மேயர், ஆணையர் முதல் களப் பணியாளர்கள் வரை அனைவரும் களத்துக்கு சென்று, மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிடுவதாக சமூகவலைதளங்களில் ஆய்வு படங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு தெரியாமல் டிராக்டர்காரர்கள் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். தண்டையார்பேட்டை மண்டலம், எழில் நகர் பகுதியில் இருந்துவரும் மழைநீர் வடிகால், பக்கிங்ஹாம் கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின்போது மழைநீர் வடிகால்களில் தானாக மழைநீர் வெளியேறுகிறது. அதையே டிராக்டர்கள் மூலம் பக்கிங்ஹாம் கால்வாயிலும் இறைத்து வெளியேற்றி வந்தனர்.

அதை பார்த்த அப்பகுதி மக்கள், மழைநீர் சமமாக இருக்கும்போது, தங்கள் இடத்தில் இருக்கும் மழைநீரை வாளியில் அள்ளி, தெருவில் ஊற்றும் சமூக வலைதள காமெடி வீடியோவை நினைவு கூர்ந்து சிரித்தபடி சென்றனர். இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து, மாநகராட்சி நிதி வீணாவதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "தேவையில்லாமல் டிராக்டர் மூலம் மோட்டார்கள் இயக்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரிகளுக்கும், டிராக்டர் ஒப்பந்ததாரர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE