“சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: “தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தவேண்டும். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்படவேண்டும். பட்டியலின - பழங்குடியின மக்களுடைய இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும்” என்று வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.27) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங்கின் முழு திருவுருவச்சிலையை திறந்து வைத்து, சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசியது: "இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கின்ற சமூக நீதிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். வி.பி.சிங்குக்கு சிலை வைப்பது மூலமாக அவருடைய புகழ் உயருகிறது என்று பொருள் இல்லை; நாம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டி இருக்கிறோம். காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதிக் கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங் . தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று அதில் உறுதியாக இருந்தவர் வி.பி.சிங். அவருக்கு சிலை அமைப்பதை இந்த திராவிட மாடல் அரசு தன்னுடைய கடமையாக கருதுகிறது. சமூகநீதியை காக்கின்ற கடமையில் இருந்து இம்மியளவும் வழுவாமல் இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

வி.பி.சிங்கைப் பற்றியும், அவரது தியாக வாழ்க்கைப் பற்றியும் இந்திய மண்ணில் உள்ள ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, இளைஞர்களுக்கு அவருடைய வாழ்வு திரும்ப திரும்ப சொல்லப்படவேண்டும். அதனால்தான் மாநில கல்லூரியில் அவருடைய சிலையை அமைத்திருக்கிறோம்.வி.பி.சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிகப்பெரிய ஜமீன்தாருக்கு மகனாக பிறந்து, ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும், அதில் மனது ஒட்டாமல் கல்லூரி படிக்கின்ற காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார். சர்வோதய சமாஜில் இணைந்தார். பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார். வினோபாவிடம் தன்னுடைய நிலங்களையே தானமாக வழங்கினார்.

1969-ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர். இந்திய ஒன்றியத்தில் வர்த்தக அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பதவிகளை வகித்தார். தேசிய முன்னணியை உருவாக்கி 1989-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார். வி.பி.சிங் பிரதமராக இருந்தது பதினோரு மாதம்தான் என்றாலும், அவர் செய்த சாதனை என்பது மகத்தானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டப்போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய மக்கள்தொகைக்கு ஏற்ப, இடஒதுக்கீடு தரப்படவில்லை. அதை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையம்.

சமூக ரீதியாவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படுகின்ற சமூகத்துக்கு மத்திய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் பரிந்துரையின் உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங்.அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஏன், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல. ஆனாலும் ஏழை , எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீட்டைச் சாத்தியப்படுத்திக் காட்டியவர். அப்போது நாடாளுமன்றத்தில் பெரியார், அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகிய மூவருடைய பெயரைத்தான் வி.பி.சிங் குறிப்பிட்டார். பெரியாருக்குத் தனிப்பட்ட நன்றியை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்.

அவர் பதவியில் இருந்த பதினோரு மாத காலத்தில்,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு,தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு தொடக்கப்புள்ளி,தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு தொடக்கப்புள்ளி,வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை உருவாக்கியது,லோக்பால் சட்டத்துக்கு தொடக்க முயற்சிகள்,தேர்தல் சீர்திருத்தங்கள், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது, நாடாளுமன்றத்தின் நடுவே அம்பேத்கர் படம், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், உழவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள், டெல்லி குடிசைப்பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (MRP) அச்சிட உத்திரவு, நுகர்வோர் பாதுகாப்பு, என இன்னும் பட்டியல் நிறைய இருக்கிறது.

இப்படி பல சாதனைகளை செய்து காட்டிய மாபெரும் சாதனையாளர்தான் நம்முடைய வி.பி.சிங். மதிப்புக்குரிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் முயற்சியால்தான் இன்றைக்குப் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு அடியாவது முன்னேறியிருக்கிறார்கள். நாம் இன்னும் பல உயரங்களுக்குச் செல்லவேண்டும். நமக்கான உரிமைகள் இன்றைக்கும்கூட முழுமையாக கிடைக்காத, கிடைக்க முடியாத சூழல்தானே நிலவுகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கல்வி நிறுவனங்களில் ஓபிசி இடஒதுக்கீடு 2006-க்கு பிறகுதான் நடைமுறைக்கு வந்தது.

பல்கலைக்கழக மானியக்குழு இணை இயக்குநர் பதவிக்கு இடஒதுக்கீடே கிடையாது. எல்லாமே பொதுப்பிரிவு, மத்திய அரசின் துறைச் செயலாளர்கள் 89 பேரில் 85 பேர் உயர்சாதியினர். பட்டியலினப் பிரிவைச் சேர்ந்தவர் ஒரே ஒருவர், பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் மட்டும்தான். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட கிடையாது. மத்திய அரசு துறைகளின் கூடுதல் செயலாளர்கள் 93 பேரில், 82 பேர் உயர்சாதியினர். பிற்படுத்தப்பட்டவர் கிடையாது. மத்திய அரசு துறைகளின் இணைச் செயலாளர்கள் 275 பெயரில், 19 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள். அசாம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருக்கின்ற மத்திய சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு வரை இடஒதுக்கீடே இல்லாத நிலைதான் நீடிக்கிறது.45 மத்தியப் பல்கலைக்கழகங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள் 4 விழுக்காடு மட்டும்தான். இப்படித்தான் பல்வேறு துறைகளில் இன்றைக்கும் நிலைமை இருக்கிறது.

சரி, நீதிமன்றங்களில் சமூக நீதியின் நிலை என்ன? 2018 முதல் 2023 வரை நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 72 பேர் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால், 458 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை. ஏன், அரசுத் துறைகளின் பதவி உயர்வுகளின் போது இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தபடவில்லை. இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்குதான் நாம் தொடர்ந்து உழைக்கவேண்டும். அதுதான் வி.பி.சிங் போன்றோருக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான புகழ் வணக்கம்.

அந்தப் பணியிலிருந்து திமுக ஒருபோதும் சோர்ந்து போகாது. அதற்கு எடுத்துக்காட்டுதான், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அன்றிலிருந்து இன்றைக்கு வரை நாம் முன்னெடுக்கின்ற சட்ட முயற்சிகள். இந்தியா முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இல்லாமல் இருந்த ஓபிசி இடஒதுக்கீட்டை 29.7.2021 அன்று உச்சநீதிமன்றம் மூலமாக திமுகதான் இந்தியாவிற்கே பெற்றுத் தந்தது. அதுமட்டுமா, தமிழகத்தில் சமூகநீதியைக் கண்காணிக்க குழு அமைத்திருக்கிறோம்.

பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும் கொண்டாடி வருகிறோம். சமூகநீதிக்குத் தடையாக அமைந்துள்ள நீட் தேர்வை அகற்றும் சட்டப்போராட்டத்திலும், அறப்போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நம்முடைய தமிழகத்தைத்தான் தன்னுடைய ரத்த சொந்தங்கள் வாழுகிற மாநிலமாக நினைத்தார் வி.பி.சிங். பெரியாரை தன்னுடைய உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக்கொண்டார்.

“ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது 'அவமானம்'. அந்த அவமானத்தைத் துடைக்கின்ற மருந்துதான் பெரியாரின் “சுயமரியாதை” என்று சொன்னவர் வி.பி.சிங் . தலைவர் கருணாநிதியைச் சொந்த சகோதரனைப் போல மதித்தார். “காலம் மாறினாலும் தான் மட்டும் மாறாமல் இருக்கிற ஒரு தலைவர் உண்டென்றால் அது கருணாநிதி தான். பதவியைக் காப்பாற்றிக் கொள்ள என்னுடைய கட்சி முதல்வர்களே என்னை விட்டு ஓடிய நேரத்தில் என்னுடன் இருந்தவர் கருணாநிதி" என்று பாராட்டியவர் வி.பி.சிங் .

சென்னையில் இருக்கின்ற இரண்டு விமான முனையத்துக்கு அண்ணா பெயரையும், காமராசர் பெயரையும் வைக்கவேண்டும் என்று அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கோரிக்கை வைத்தார். அப்போதெல்லாம் செல்போன் கிடையாது. அவருக்கென்று ஒரு பிரைவேட் ரூம் இருக்கும், அதில் லைட்டினிங் கால் இருந்தது, அதிலிருந்துதான் போன் பேச முடியும். பிரதமர் வி.பி.சிங் சென்னையில் நடந்த கூட்டத்தின் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, டெல்லிக்கு Lightning call செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி, இப்படி ஒரு கோரிக்கை இருக்கிறது, இதை நிறைவேற்ற வேண்டும் என்று கலந்துபேசி அதை அந்த மேடையில் அறிவித்தார். அதே மேடையில் கருணாநிதி கேட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தார். இன்றைக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது

தமிழக மக்களுடைய உயிர் பிரச்சினையான காவிரி நீருக்காக பல ஆண்டுக்கு பிறகு, பல போராட்டத்துக்கு பிறகு, தலைவர் கருணாநிதியுடையை கோரிக்கை ஏற்று, வி.பி.சிங் ஆட்சியில் தான் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்துத் தந்தார்.அதேபோல், இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பிரதமர் வி.பி.சிங் எவ்வளவு அக்கறையோடு நடந்துகொண்டார் என்றால், தன்னுடைய வீட்டிலேயே அகில இந்தியத் தலைவர்களையும், மாநில முதல்வர்களையும் 1990-ம் ஆண்டு கூட்டினார். 9 மாநில முதல்வர்கள், 7 மத்திய அமைச்சர்கள், 5 அகில இந்தியக் கட்சித் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

எல்லோரையும் வரவழைத்து, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியைத்தான் பேசச் சொன்னார் பிரதமர் வி.பி.சிங். பேசச் சொன்னதற்கு பிறகு சொல்கிறார், ‘இப்போது கருணாநிதி சொல்லப் போவதுதான் என்னுடைய கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங். “தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் டெல்லியில்தான் கூட்டணுமா? மாநிலங்களில் கூட்டலாமே?” என்று முதல்வராக இருந்த கருணாநிதி கோரிக்கை வைத்தார். 'அப்படியென்றால், தமிழகத்தில் நடத்துவீர்களா?' என்று பிரதமர் வி.பி.சிங் கேட்டார். உடனே, சரி என்று சொன்னார் கருணாநிதி. முதன்முதலாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது என்பது வரலாறு.

தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்த வி.பி.சிங் , உடல்நலக்குறைவால் 2008-ம் ஆண்டு நவம்பர் 27-ம் நாள் மறைந்தார். வி.பி.சிங்சின் மறைவு இந்தியாவுக்கே ஏற்பட்ட பெரும் இழப்பு. சமூகநீதியின் காவலரான வி.பி.சிங்குக்கு சிலை வைத்ததன் மூலமாக தமிழக அரசு இன்றைக்கு பெருமை அடைகிறது. சமூகநீதிப் பயணத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை இல்லை; எல்லா மாநிலங்களின் பிரச்சினை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி- வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்சினை ஒன்றுதான். அதுதான், புறக்கணிப்பு. எங்கெல்லாம் புறக்கணிப்பு, ஒதுக்குதல், தீண்டாமை, அடிமைத்தனம், அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை முறிக்கின்ற மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி. அந்த சமூகநீதி தழைக்க வேண்டுமானால், நாம் முன்னெடுக்க வேண்டிய சில முக்கிய பணிகளை சொல்லி, நிறைவு செய்ய விரும்புகிறேன்.

தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தவேண்டும். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்படவேண்டும். பட்டியலின - பழங்குடியின மக்களுடைய இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும். சிறுபான்மையினர் இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும். இதையெல்லாம் அகில இந்திய ரீதியில் கண்காணித்து, உறுதி செய்ய அனைத்து கட்சி எம்.பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இதனையெல்லாம் அகில இந்திய அளவில் சமூகநீதியில் ஆர்வம் கொண்ட அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒற்றுமையாக இணைந்து மக்கள் நலனுக்காகச் செயல்படவேண்டும்.

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கின் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய உறுதிமொழி; “இந்தியா முழுமைக்கும் வாழும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை, விளிம்பு நிலை மக்களுடைய உயர்வுக்கான “அரசியல் செயல்திட்டங்கள்” “அரசின் செயல்திட்டங்களாக” மாற்றி அமைக்க இன்றைக்கு உறுதி ஏற்போம்" என்று முதல்வர் பேசினார்.

இதனிடையே, “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு உரிமை இருப்பதாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுவது மாநில உரிமைகளை தாரை வார்ப்பது இல்லையா? மாநில உரிமைப் போராளி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் முதல்வர், சமூக நீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்