யாத்ரி சேவை அனுபந்த் திட்டத்தின்கீழ் வந்தே பாரத் ரயில்களில் உலகத்தரத்தில் வசதி: ரயில்வே முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, யாத்ரிசேவை அனுபந்த் என்ற முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தி, ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு உணவு உள்பட பல்வேறு சேவைகளை உலகத் தரத்தில் வழங்க முயற்சி எடுத்துள்ளது.

ரயில் பயணிகளின் சேவைகளை மேம்படுத்த இந்திய ரயில்வே புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம், வந்தே பாரத் ரயில்களில் பயணிகளின் பயண அனுபவம் மேலும் உயர உள்ளது.

அதாவது, ரயில் பயணத்தின்போது, சேவைகளில் ஒரு தரமான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேயில் 6 ஜோடி வந்தே பாரத் விரைவு ரயில்களில் யாத்ரி சேவை அனுபந்த் என்ற திட்டத்தை தொடங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ஒரு முன்னோடி திட்டமாகும். ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவது, சிறந்த சேவை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.

உணவு, தூய்மைப்பணி: ரயில்வேயின் தூய்மைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் உணவு,தூய்மைப்பணி போன்றவற்றில் ஒரு சேவை வழங்குநர் நியமிக்கப்படுவார். சேவையின் தரத்தை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு ரயிலிலும் உணவு மற்றும் குளிர்பான சேவைகளுக்காக பிரத்யேகமாக ஒருவர் பணியமர்த்தப்பட்டிருப்பார். யாத்ரி சேவை அனுபந்த் திட்ட மேலாளர், விருந்தோம்பல் துறையில் மூன்றாண்டு பணி அனுபவம் பெற்ற பட்டதாரியாக இருப்பார்.

முன்னோடித் திட்டம்: தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல்-மைசூர், சென்னை எழும்பூர் -திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் -கோவை, திருவனந்தபுரம்-காசர்கோடு மற்றும் சென்னை சென்ட்ரல் -விஜயவாடா ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் இது ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE