இண்டியா கூட்டணியை உடைக்கிறார் ஸ்டாலின்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘நாங்கள் கைகாட்டுபவர்கள்தான் பிரதமர் ஆக முடியும்’ என்று கூறியதன்மூலம், இண்டியா கூட்டணியை உடைக்கும் வேலையை முதல்வர் ஸ்டாலின் செய்திருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்,

சென்னையில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று கூறியதாவது:

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் அருகே பாஜக நிர்வாகிகள் முகாம் அமைத்து வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை திமுகவினர் சிலர் தாக்கி அவர்களது பணிக்கு இடையூறு செய்துள்ளனர். பாஜகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடுவது, கைது செய்வது என்பதை தாண்டி, திமுகவினர் ஒரு படி மேலே சென்று, பாஜகவினர் மீது தாக்குதலும் நடத்த தொடங்கிவிட்டனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘நாங்கள் கை காட்டுபவர்கள்தான் பிரதமர் ஆக முடியும்’’ என்று கூறியுள்ளார். இண்டியா கூட்டணியில் இருந்துகொண்டே அவர் இவ்வாறு கூறினால், அந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை அவர் பிரதமராக ஏற்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இண்டியா கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும் என்று ஏற்கெனவே கூறியுள்ளோம். கூட்டணியை உடைக்கும் வேலையை முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியை பெறும்.

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது. மண்டல் கமிஷன் அறிக்கை எவ்வாறு ஓபிசிமக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததோ, அதேபோல, இன்று பிஹார் அரசு தானாக முன்வந்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உள்ளது. அவர்கள் செய்யும்போது, அதை ஏன் தமிழக அரசு செய்ய கூடாது. சமூக நீதி என்பதற்கு அர்த்தம் கண்டுபிடித்ததே திமுகதான் என்பதுபோல வெற்று பேச்சுகளை பேசாமல், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும். பிஹார்போல, தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

சேரி என்றால், அனைத்து மக்களும் வசிக்கும் பகுதி என்று பொருள். அங்கு குறிப்பிட்ட சாதியினர்தான் இருப்பார்கள் என்று கிடையாது. அதற்கு இத்தனை நாட்கள் விவாதம் தேவையா என்று அனைவரும் யோசிக்க வேண்டும். சேரி என்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் தரும் பொருளை பார்க்கும்போது, அவர்கள் இன்னும் சாதிய வன்மத்துடன்தான் இருக்கின்றனர் என்று தெரிகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, இந்திய நாட்டுக்கு எதிராக எந்தவித கருத்துகள் வந்தாலும், அது தடை செய்யப்படும். அதுபோல, நட்பு நாடுகளுக்கு எதிராக பேசுவதும் தேச துரோகம்தான். திரைப்படங்களில் அதுபோன்ற காட்சிகள் அமைக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE