கொழும்பு - தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் சேவை மீண்டும் தொடங்கியது.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கடைக்கோடி பகுதியான தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 24.2.1914-ல் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு 1964-ம் ஆண்டு டிச.22-ல் புயல் தாக்கி தனுஷ்கோடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்னர் மீண்டும் 1965-ம் ஆண்டிலிருந்து ராமேசுவரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ‘ராமானுஜம்’ என்ற பெயரிடப்பட்ட இந்த பயணிகள் கப்பலில் அதிகபட்சமாக 400 பேர் வரை பயணம் செய்யும் வசதி இருந்தது. முதல் வகுப்பு கட்டணம் ரூ. 123, சாதாரண கட்டணம் ரூ. 60 என வசூலிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்துக்கு மூன்று நாட்கள் இக்கப்பல் சேவை நடைபெற்றது.
ராமேசுவரத்திலிருந்து பல்வேறு வகையான சரக்குகளை தலைமன்னார் வரை கப்பலிலும், அதனை தொடர்ந்து ரயிலில் கொழும்பு வரையிலும் கொண்டு சென்று வியாபாரிகள் விற்பனை செய்தனர். அதேபோன்று, கொழும்பிலிருந்து எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி வந்தனர்.
இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை யுத்தமாக மாறியதால், தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான ரயில் பாதை சேதமடைந்ததாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கப்பல் போக்குவரத்து 1983-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
பின்னர், 2009-ம் ஆண்டில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 13.6.2011-ம் தேதி முதல் தூத்துக்குடி - கொழும்பு இடையே ‘ஸ்கார்டியா பிரின்ஸ்’ என்ற 9 அடுக்கு கொண்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1,200 பயணிகள் செல்லக்கூடிய இந்த கப்பல் வாரம் இரு நாட்கள் இயக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் எதிர்ப்பை தொடர்ந்து 18.11.2011-ல் இக் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை மற்றும் சரக்கு கப்பல் சேவை தொடங்குவதற்கான ஆவணங்களை இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை மற்றும் சரக்கு கப்பல் சேவை மூலம் இரு நாட்டு மக்களுக்கும் இடையே கலாச்சார மற்றும் பொருளாதார தொடர்புகள் மேம்படும். இரு நாட்டு சுற்றுலா, வர்த்தகம் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனை இலங்கை அமைச்சரவை ஏற்றுக்கொண்டு கப்பல் போக்குவரத்துக்கு ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, கொழும்பு துறைமுகத்திலிருந்து தமிழகத்தின் இரண்டாவது மிகப் பெரிய துறைமுகமான தூத்துக்குடிக்கும் இடையே சரக்கு கப்பல் சேவை நேற்று தொடங்கியது. தாய்லாந்தை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்.வி.சார்லி’ என்ற சரக்கு கப்பல் வாரந்தோறும் வெள்ளி மற்றும் திங்கள்கிழமைகளில் கொழும்பு - தூத்துக்குடிக்கு இடையே இயக்கப்படும். இதன் மூலம் தூத்துக்குடியில் இருந்து காய்கறிகள், உப்பு, நாட்டு மருந்துகள், ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் சரக்கு கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago