திருடுபோன 26 பவுன் நகை ஊர் வழக்கப்படி தண்டோரா மூலம் மீட்பு: மதுரையில் போலீஸை வியப்படைய வைத்த கிராமம்

By என். சன்னாசி

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே கிராம வழக்கப்படி, திருடுபோன 26 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் தண்டோரோ மூலம் மீட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வை கண்டு காவல்துறையினர் வியந்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ளது பெரிய பொக்கம்பட்டி. இவ்வூரைச் சேர்ந்தவர் ராகவன் (51). இவரது மனைவி பாண்டியம்மாள் (45). இருவரும் 2 நாளுக்கு முன்பு வழக்கம்போல் வேலைக்குச் சென்றனர். மதியம் வீடு திரும்பிய போது, வீட்டுக் கதவு திறக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் இருந்த சுமார் 26 பவுன் நகை மற்றும் ரூ. 21,000 திருடு போனது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சிந்துப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பட்டப்பகலில் வெளியூர் நபர்கள் யாரும் வந்து திருட வாய்ப்பில்லை என்பதால் உள்ளூர் நபருக்கே தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்தனர்.

இந்நிலையில், உள்ளூரில் யாராவது திருடி இருந்தால் போலீஸார் கைது செய்யும் சூழல் ஏற்பட்டு, ஊருக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் ஊரின் வழக்கப்படி, அனைத்து வீடுகளுக்கும் பேப்பர் கவர் ஒன்றை வழங்கினர். ஊரிலுள்ள மின்விளக்குகள் அனைத்தும் அனைத்த பின், திருடிய நபர்கள் யாராக இருந்தாலும் கவரில் நகைகளை வைத்து, ஊர் மந்தையில் வைக்கப்பட்டுள்ள அண்டா பாத்திரத்தில் போட்டு விடலாம் என அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக தண்டோரா மூலம் தகவல் பரப்பப்பட்டது.

திட்டமிட்டபடி, கிராம பள்ளிக்கூடத்தில் இரவு 8 மணிக்கு 2 அண்டாக்கள் வைக்கப்பட்டன. மின் விளக்குகளும் அணைக்கப்பட்டன. 1 மணி நேரத்திற்கு பிறகு மின் விளக்குகள் மீண்டும் எரியவிடப்பட்டன. அண்டாவிலுள்ள கவர் பார்ச்சலை பிரித்தபோது, நகையை திருடிய நபர் போட்டுவிட்டு சென்றது தெரிந்தது. 26 பவுனுக்கு 23 பவுன் நகை கிடைத்தது. எஞ்சிய 3 பவுன் மற்றும் பணத்தை மீட்க மீண்டும் வீடு, வீடாக காலி கவர் கொடுத்து, பொது இடத்தில் அண்டா வைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 3 பவுன், ரூ.20 ஆயிரமும் மீட்கப்பட்டது. நகை, பணத்தை போலீஸார் மூலம் ராகவனிடம் ஒப்படைத்தனர். பெரிய பொக்கம்பட்டியில் திருடுபோன நகைகள் அந்த ஊரின் பாரம்பரிய வழக்கபடி, தண்டோரா மூலம் மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது போன்ற நடைமுறை பிற கிராமத்திலும் இருந்தால் ஓரளவுக்கு திருட்டு போன்ற குற்றச் செயல்களை தடுக்கலாமே என போலீஸாரும் வியந்தனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘இவ்வூரில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பெரும்பாலும் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடப்பதில்லை. குறிப்பாக திருட்டு சம்பவம் நடந்தால் ஊரின் வழக்கப்படி, காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுப்பதை விட, தண்டோரோ மூலம் பாதிக்கப்பட்டோரின் பொருட்களை மீட்டு தருவோம். இதன்படி, ராகவன் வீட்டிலும் திருடு போன நகைகள் மீட்கப்பட்டன. புகார் எதுவும் கொடுக்கவில்லை. எங்களுக்குள் சமரசம் ஆகிவிட்டோம் என காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்து விட்டோம். குற்றச்செயலுக்கென எங்களது ஊரைச் சேர்ந்த நபர்களை எந்த வகையிலும் போலீஸார் கைது செய்தால் அசிங்கமாகவே கருதுவோம்" என்றனர்.

காவல்துறையினர் கூறுகையில், ‘தகவல் தெரிந்து விசாரித்தோம். அந்த ஊரின் வழக்கப்படி பாதிக்கப்பட்டவரின் நகைகள் கிடைத்து சமாதானம் ஆனதால் விசாரிக்கவில்லை. நாங்கள் அறிந்த வரையிலும், இன்றைக்கும் திருடுபோன நகையை கிராமத்தினரே தண்டோரோ மூலம் மீட்டு ஒப்படைப்பது நடைமுறையில் இருப்பது வியப்பாக இருந்தது’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்