மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம்: விளக்கு ஒளியில் ஜொலித்த பொற்றாமரைக்குளம்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் பொற்றாமரைக்குளம் உள்பட கோயில் வளாகம் முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலித்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நவ. 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதிகளில் எழுந்தருளினர்.

திருக்கார்த்திகையின் ஆறாம் நாளான்று கோயில் பொற்றாமரைக்குளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, உள்பிரகாரங்கள் உள்பட கோயில் வளாகம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதனால் கோயில் வளாகம் விளக்கொளியில் ஜொலித்தது. பின்னர், மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சந்நிதி தேரடி அருகில் பூக்கடை தெரு ஆகிய 2 இடங்களிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் எழுந்தருளினர்.

அதேபோல், உப கோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில் உள்பட கோயில்களிலும் கார்த்திகை தீப ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE