மதுரையில் ஐடி வேலைவாய்ப்புகள் டேக் ஆஃப் ஆவது எப்போது? - அறிவிப்போடு நிற்கும் மாட்டுத்தாவணி டைடல் பார்க்!

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மாட்டுத்தாவணி டைடல் பார்க் அறிவிப்போடு நிற்கும் நிலையில் மதுரையில் ஐடி வேலைவாய்ப்புகள் டேக் ஆஃப் ஆகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஆண்டுக்கு 1 லட்சம் மாணவர்கள் இன்ஜினீரிங் படிப்பு முடிக்கிறார்கள். அவர்களில் 40 சதவீதம் பேர் நேரடியாக சாப்ட்வேர் என்னும் மென்பொருள் துறைப் பணிக்கு வருகிறார்கள். சிவில், மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் முடித்தவர்களும் கூட அவர்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் கடைசியில் இந்த சாப்ட்வேர் பணிக்கே வருகிறார்கள். அதனால், இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க, தமிழக அரசு தற்போது முக்கிய நகரங்களில் 'டைடல் பார்க்', 'எல்காட் ஐடி பார்க்' போன்ற சாப்ட்வேர் ஐடி நிறுவனங்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.

ஆனால், இந்த கட்டமைப்புகளுக்காக உலகின் தலைசிறந்த ஐடி நிறுவனங்கள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே போன்ற பெரு நகரங்களை விட்டு தங்கள் கிளை நிறுவனங்களை மதுரை, திருச்சி, திநெல்வேலி போன்ற மற்ற இரண்டாம் தர மாநகரங்களுக்கு அமைக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. தமிழகத்தில் ஐடி நிறுவனங்களின் தலைநகரான சென்னை, கோவையை தாண்டி ஐடி நிறுவனங்கள் மற்ற நகரங்களுக்கு வர மறுக்கின்றன. மேலும், தற்போது ஐடி நிறுவனங்களை பொறுத்தவரையில் கடந்த காலங்களை போல் மிகப்பெரிய டவர் கட்டிடங்கள், தகவல் தொழில்நுட்ப வசதிகள், ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம் போன்ற தடையில்லா போக்குவரத்து வசதிகள் தற்போது தேவையில்லை.

கரோனாவுக்கு பிறகு கண்டறியப்பட்ட 'ஒர்க் ப்ரம் ஹோம்' முறை வந்தபிறகு, பெரும்பாலான பெரிய ஐடி நிறுவனங்களின் பணியாளர்கள் தற்போது கூட வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வருகிறார்கள். அதனால் முன்போல் மிகபெரிய டவர் கட்டிட கட்டமைகள் தற்போது ஐடி நிறுவனங்களுக்கு தேவையில்லை. அவர்கள் தங்கள் ஊழியர்களை உலகின் எந்த மூலையில் வைத்தும் வேலைவாங்க தயாராகிவிட்டார்கள். அதனால், தமிழக அரசு தற்போது டைடல் பார்க், எல்காட் ஐடி பார்க் போன்ற ஐடி நிறுவனங்கள் கால் பதிக்க ஏதுவாக மிகப்பெரிய கட்டமைப்புகளை உருவாக்கியும் கூட, அவை சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களை தாண்டி மற்ற நகரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

உதாரணமாக பெங்களூருவுக்கு அருகில் ஓசூர் நகரில் கடந்த 10 ஆண்டிற்கு முன் பாகலூர் ஐடி பார்க் தொடங்கப்பட்டது. தற்போது வரை, இந்த ஐடி பார்க் முழுமையாக செயல்படாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது சென்னையை தாண்டி, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் போன்ற நகரங்களில் மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை தொடங்கி உள்ளூர் நகரங்களில் ஐடி முடிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்குமா? என்றால் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மதுரையில், வடபழஞ்சி, பாண்டிக்கோயில் அருகே உள்ள இலந்தை குளம் போன்ற இடங்களில் எல்க்காட் 'ஐடி பார்க்'கள் செயல்படுகின்றன. 15 ஆண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட வடபழஞ்சி ஐடிபார்க்கே இன்னும் முழுவீச்சில் செயல்பட ஆரம்பிக்கவில்லை. ஒரு சில நிறுவனங்கள் தற்போதுதான் தங்கள் கட்டுமானப்பணிகளை தொடங்கியிருக்கின்றன. சில நிறுவனங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டுகின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த இரு இடங்களிலும் ஹெச்.சி.எல்(HCL), ஹனிவெல் (Honey well), டி.வி.எஸ்(TVS) போன்ற 6 முக்கிய நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. மற்றவை சிறிய நிறுவனங்களே.

இந்த நிறுவனங்களில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைபார்க்கிறார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் வெளியூர்காரர்களே. அவர்களும் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறிவிட முடியாது. அனுபவம் வாய்ந்த ஐடி நிறுவனப் பணியாளர்கள் மதுரை, கோவை போன்ற நகரங்களில் பணிபுரிய ஆர்வப்படவில்லை. அவர்கள் மிகப்பெரிய ஊதியத்துக்காக சென்னை, ஐதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களுக்கும், அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் செல்வதையே விரும்புகிறார்கள். அதனால், மதுரையில் தற்போது ஐடி பார்க் தொழில் இன்னும் டேக் ஆஃப் ஆகாமல் உள்ளதாக சாப்ட் வேர் நிறுவனங்கள் நடத்தும் சிறிய நிறுவன தொழில்முனைவோர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மாட்டுத்தாவணியில் ரூ.500 கோடியில் 10 ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைப்பதாக கூறப்பட்டது. ஐடி துறை அமைச்சராக பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளார். நிதி அமைச்சராக தென் மாவட்டத்தை சேர்ந்த தங்கம் தென்னரசு உள்ளார். ஆனால், முதல்வர் அறிவித்தபடி டைடல் பார்க்கை மதுரையில் தற்போது வரை கொண்டு வரமுடியவில்லை. மாநகராட்சி இடம் கொடுக்க தயாராக இருந்தும், இன்னும் இந்த திட்டம் டேக் ஆஃப் ஆகாமல் உள்ளது.

இதுகுறித்து மதுரை கன்சோட்ரீ சமூக பொருளாதார ஆராய்ச்சி நிறுவன நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் ஆர்.கே.ஜெயபாலன் கூறியதாவது: ''தமிழக அரசு வெறும் ஐடி பார்க் கட்டமைப்புகளை உருவாக்குவதை காட்டிலும், புதிதாக ஐடி படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க திட்டமிட வேண்டும். ஐடி நிறுவனங்களில் அறிவுசார்ந்த வேலைகள் இருப்பதால் உள்ளூர் இளைஞர்களுக்கே முழுக்க முழுக்க வேலை கொடுக்க அரசு ஐடி நிறுவனங்களை நிர்பந்தம் செய்ய முடியாது. புதிதாக இன்ஜினீரிங் முடிக்கும் மாணவர்களுக்கு மதுரையில் வடபழஞ்சி, இலந்தை குளம் ஐடி நிறுவனங்களில் குறைந்தப்பட்சம், இன்டன்சீப் வழங்க அரசு உறுதி செய்யலாம்.

இலந்தைகுளம் ஐடி பார்க்கில் ஹெச்.சி.எல் நிறுவனம் மட்டுமே மிகப்பெரிய ஐடி நிறுவனம். அங்கும் வெளியூர்க்காரர்கள்தான் அதிகம் பணிபுரிகிறார்கள். ஹனி வெல், அமெரிக்காவில் தலைசிறந்த 100 நிறுவனங்களில் ஒன்றாக இருந்தாலும், அது ஐடி நிறுவனம் கிடையாது. விமானங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கக் கூடிய கம்பெனி. அந்த கம்பெனிக்கான ஐடி சாப்ட் வேர் சப்போர்ட் தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனமாக மட்டுமே இங்கு செயல்படுகிறது. சென்னையில் டைடல் பார்க் ஆரம்பித்த சூழல் தற்போது இன்று இல்லை.

வெறும் ஐடி நிறுவனங்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலைவாய்ப்புகள் வந்துவிடும் என்பதை கூறிவிட முடியாது. அப்படியேன்றால் ஏற்கெனவே மதுரையில் வடபழஞ்சி, இலந்தை குளம் போன்றவற்றில் 100 சதவீதம் இடங்களை இன்னும் ஏன் முக்கிய ஐடி நிறுவனங்கள் ஆக்கிரமிக்கவில்லை. சென்னை, கோவையில் இதுபோன்ற ஏற்கனவே பெரிய ஐடி பார்க் கட்டுமான அடிப்படைவசதிகள் வந்துவிட்டன. ஐடி இண்டஸ்ட்ரீஸ் தமிழகத்திற்கு வந்து 30 ஆண்டுகள் ஆனநிலையில் இனி அதற்கான கட்டிடம் கட்டி இந்த தொழில் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று இந்த தொழில் சூழல் மாறி கொண்டு வருகிறது. எங்கு வேண்டுமென்றாலும் இருந்துகொண்டு வேலைபார்க்கும் சூழல் வந்துவிட்டதால் பெருமைக்காக வேண்டுமென்றால் இன்று அரசு டைடல் பாரக், எல்காட் பார்க் கட்டிக் கொள்ளலாம்.

அங்கு அந்த நிறுவனங்களை வரவழைப்பதிலும், புதிதாக படித்து முடிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுப்பதிலும் மட்டுமே சவால் இருக்கிறது. உத்தரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் வேண்டுமென்றாலும் இதுபோன்ற ஐடி டவர்களை கட்டினால் அங்கு புதிதாக ஐடி தொழில் உதயமாக வாய்ப்புள்ளது. ஆனால், தற்போது தமிழர்களின் தலையாய தொழிலே ஐடி தொழில் ஆகிவிட்டது. தகவல் தொழில்நுட்ப தலைநகராக சென்னை மாறிவிட்டது. அதனால் வெறும் கட்டிடங்கள் மட்டும் பெரிய பொருளாதார விளைவுகள், சமுதாய விளைவுகளை மதுரையில் ஏற்படுத்திவிட முடியாது. படித்து முடித்து வருகிறவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கொடுக்கலாம் என சிந்திக்கலாம்,'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE