“இது பழைய பாஜக அல்ல... அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்கள் எண்ணப்படுகின்றன” - அண்ணாமலை காட்டம்

By கி.மகாராஜன் 


மதுரை: ஆவினில் ஒவ்வொரு பால் பாக்கெட்டுக்கும் ரூ.10 முதல் ரூ.12 வரை கொள்ளையடிக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர் “ இது பழைய பாஜக அல்ல. நானும் பழைய பாஜககாரன் அல்ல. அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்கள் எண்ணப்படுகின்றன” என்றார்.

ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்தி கொள்வதாக வெளியிட்ட தகவலுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அமைச்சர் மனோ தங்கராஜையும் கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில், இருவருக்குமான வார்த்தைப் போர் நீடித்துக் கொண்டே வருகிறது. இது குறித்து மதுரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக அரசியலில் அடிப்படை நாகரிகம் தேவை. திமுகவினர் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். காமராஜரை அவதூறு மூலம் தான் தோற்கடித்தனர். திமுகவில் கோழைகள்தான் அதிகமாக உள்ளனர். பிரதமர் குறித்த ட்வீட்டை அழித்துக் கொண்டு ஓடியவர்தான் அமைச்சர் மனோ தங்கராஜ்.

ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட்டுக்கும் ரூ.10 முதல் ரூ.12 வரை கொள்ளையடிக்கின்றனர். தனியார் பால் நிறுவனங்களுக்கும், ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் அரசியலில் இருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு. அவரின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அவர் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த போது செய்த ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். பாஜக மக்களுக்காக அரசியல் செய்கிறது. அந்த அரசியல் காரசாரமாகத்தான் இருக்கும். மரியாதை கொடுத்தால் மரியாதை கொடுப்போம். இது பழைய பாஜக அல்ல. நானும் பழைய பாஜககாரன் அல்ல.

அமைச்சர் ரகுபதி பொய் சொல்வதில் கில்லாடி. துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் உடனே கையெழுத்துப் போடவில்லை என்றால் தமிழக அரசு நிர்வாகம் முடங்கிவிடுமா? தமிழக அரசால் மசோதாவைச் சரியாக வடிவமைக்க முடியவில்லை. பெரும்பான்மை இருப்பதால் எந்த மசோதாவையும், எப்போதும் கொண்டு வருவோம் என்றால் அனைத்து மசோதாக்களையும் ஏற்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை.

திமுக பலமுறை ஆட்சியிலிருந்தும் திருடப்பட்ட சிலைகளில் 13 சிலையை மட்டும் மீட்டுள்ளனர். பாஜகவினர் கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்து உள்ளார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். நான் வரவேற்கிறேன். கோயில் நிலம் ஆக்கிரமிப்பில் 97 சதவீதம் தொடர்புடையவர்கள் திமுகவினர். ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றதற்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு?

கோயில் உண்டியலில் வரும் பணத்தை வைத்து அதே கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தி மக்களை முட்டாளாக்கி வருகின்றனர். கோயில் பணத்தை முழுவதுமாக அந்தக் கோயிலை ஒட்டியுள்ள மக்கள் பயன்படும் வகையில் தான் செலவிட வேண்டும். கோயில் பணத்தில் அதிகாரிகளுக்கு அலுவலகம், கார் வாங்குவது அறநிலையத் துறை சட்டத்தில் இடமில்லை” என்று கூறினார். பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உடனிருந்தனர்.

பின்புலம்: ஆவின் பாலில் கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ஆவின் பால் பாக்கெட்களில் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதாக ஆய்வக பரிசோதனை அறிக்கை ஒன்றையும் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “உண்மை தன்மை இல்லை என்றும், வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்துக்கு எதிராக பேசுகின்றனர்” எனவும் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய அமைச்சர் மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன் என்றும், அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE