சிவில் சர்வீஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது இந்தி மொழி தெரிந்தவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்துவதால் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறியுள்ள மனுதாரர், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, டிசம்பர் 6-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE