7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதில் தாமதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை(நவ. 26) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பிருந்தது.

தற்போது 27-ம் தேதி உருவாகக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. அது 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல்வரும் 30-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று (நவ.24) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 9 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி, நீலகிரிமாவட்டம் அழகரை எஸ்டேட், பில்லிமலை எஸ்டேட் ஆகிய இடங்களில் 8 செ.மீ., நீலகிரி மாவட்டம் பர்லியாறு, கீழ்கோத்தகிரி எஸ்டேட் ஆகிய இடங்களில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தெற்கு அந்தமான், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் 27-ம் தேதி 55 கி.மீ. வேகத்திலும், 28-ம் தேதி 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE