போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் கோரி சென்னையில் 16 சங்கங்கள் போராட்டம்: டிச.19-ல் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் சென்னை பல்லவன் இல்லம் முன்பு நேற்று நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், எம்எல்எப், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு உட்பட 16 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. சிஐடியு துணை பொதுச்செயலாளர் வி.தயானந்தம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் முன்னிலை வகித்தார்.

போராட்டம் குறித்து செய்தியாளரிடம் கே.ஆறுமுக நயினார் கூறியதாவது: போக்குவரத்து சேவைத் துறை என்பதால், அரசு பணம் கொடுக்க மறுக்கிறது. இதனால் பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்.

போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும். 90 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை. இதனை விரைந்து வழங்க வேண்டும்.

2003-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என்று திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தது. எனவே, அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டமைப்பு கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.4 மற்றும் 5-ம் தேதிகளில் அனைத்து பணிமனைகளிலும் பிரச்சாரம் செய்வது, டிச.19-ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சுப்பிரமணியபிள்ளை (எச்எம்எஸ்), அர்ஜுனன் (ஏஏஎல்எப்), நாராயணசாமி (ஐஎன்டியுசி) பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE