விளையாட்டு மைதானம், சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் விற்பது சட்டத்துக்கு எதிரானது: தலைமை நீதிபதி அமர்வு கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: பொது இடங்களான விளையாட்டு மைதானங்கள், சர்வதேச கருத்தரங்கு நிகழ்வுகளின்போது மதுபானங்களை விநியோகம் செய்வது சட்டத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்குகள், முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின்போது மதுபானங்களை விநியோகம் செய்யும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சமூகநீதி வழக்கறிஞர்கள் பேரவையின் தலைவரான வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ‘‘விளையாட்டு மைதானங்கள், போட்டிகள் நடைபெறும் இடங்களில் மதுபானங்கள் விநியோகம் செய்யப்படாது’’ என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, ‘‘மதுவிலக்கு சட்டப்படி விளையாட்டு மைதானங்கள், கருத்தரங்கு கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மது அருந்துவது குற்றம்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘கருத்தரங்குகளில் மது விநியோகம் செய்ய அனுமதி வழங்கினால் சாதி அமைப்புகள், அரசியல் கட்சிகளின் மாநாடுகளிலும் மதுபானங்களை விநியோகிக்க அனுமதி கோருவர்.

இசை நிகழ்ச்சி நடத்தும்போது மதுபானம் இலவசம் என்றால் டிக்கெட் விற்பனை எளிதாக நடந்து விடாதா? வருமானத்துக்காக இதுபோன்ற உரிமங்கள் வழங்கப்படுகிறதா’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர், ‘‘மதுபானம் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலமாக மட்டுமே அரசு நிர்வாகம் செயல்படுவதாக கூறுவது தவறு’’ என்றார். அதையடுத்து, பொது இடங்களான விளையாட்டு மைதானங்கள், சர்வதேச கருத்தரங்கு நிகழ்வுகளின்போது மதுபானங்களை விநியோகம் செய்வது என்பது சட்டத்துக்கு எதிரானது என்பதால் இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிச.14-ம்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE