கோட்டை ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்ட கட்டுமான கழிவுகள்: தலைமைச் செயலகம் செல்ல பாதை இல்லாமல் மக்கள் அவதி

By மு.வேல்சங்கர்

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்ல போதிய பாதை இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். ஒருபுறம்நச்சு பாம்புகள், மறுபுறம் குவிக்கப்பட்டுள்ள கட்டுமானக் கழிவுப் பொருட்கள் மத்தியில் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக, மாற்றுப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் வழித்தடத்தில் நாள்தோறும்ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் தலைமைச்செயலக ஊழியர்கள் ஆவர். இவர்கள், கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கி தலைமைச் செயலகம் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் பயணிகள் கடந்த 2 மாதங்களாக கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் போதிய நடைபாதை வசதி இல்லாததே ஆகும். சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி தற்போது நடந்து வருவதால், கோட்டை ரயில் நிலையத்தில் 4-வது, 5-வது நடைமேடைகளும், நடைமேம்பாலமும் இடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இடிக்கப்பட்ட கட்டுமான கழிவுகள், இரும்பு கம்பிகள், கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு செல்லும் பாதையில் சிதறி கிடைக்கின்றன.

இதனால்,கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு செல்ல போதிய பாதை இல்லை.ஒருபக்கம் குவித்து வைக்கப்பட்டுள்ள கட்டுமானக் கழிவுகள், மறுபக்கம் விஷப் பாம்புகள் மத்தியில் உயிர்பயத்துடன் நாள்தோறும் நடந்து செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது, மழை பெய்து வருவதால், சகதியில் சிக்கி அலுவலகம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

கு.வெங்கடேசன்

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன் கூறியதாவது: சென்னை புறநகரில் இருந்து மின்சார ரயில்கள் மூலமாக தலைமைச் செயலகத்துக்கு தினசரி சுமார் 4,500 பேர் வந்து செல்கின்றனர். இவர்களில் சுமார் 3,500 பேர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு-கடற்கரை மார்க்கத்திலும், சுமார் 1,000 பேர் வேளச்சேரி–சிந்தாதிரிப்பேட்டை மார்க்கத்திலும் இயக்கப்படும் ரயில்களில் வந்து செல்கின்றனர். தற்போது, கோட்டை நிலையத்தில் இறங்கி, தலைமைச் செயலகத்துக்கு வரும் பாதை பழைய கட்டுமான கழிவுகளால் சூழ்ந்து உள்ளது.

ஆங்காங்கே இரும்பு கம்பிகளும், கற்களும் பரவி காணப்படுகின்றன. குறுகிய பாதையில்தான் செல்ல முடியும் என்றநிலை உள்ளது. பாதையும் கரடுமுரடாக உள்ளதால், தலைமைச் செயலகம் வந்து செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம் இதற்குஉடனடி தீர்வு காண, மாற்றுப் பாதைஅமைத்து கொடுக்க வேண்டும் என்றார்.

எம்.ராஜேஸ்வரி

உடனடி மாற்றுப் பாதை தேவை: இதுகுறித்து தலைமைச் செயலக ஊழியர் எம்.ராஜேஸ்வரி கூறும்போது, "நான் கோடம்பாக்கத்தில் இருந்து மின்சார ரயிலில் கோட்டை ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து தலைமைச் செயலகம் அடைகிறேன். அங்கிருந்து தலைமைச் செயலகம் செல்லும் பாதை கடந்த 2 மாதங்களாக முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. தினசரி மிகுந்த சிரமத்துடன் அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. தற்போது, மழை பெய்து வருவதால், பல இடங்களில் மழை நீர் தேங்கி அதில் பாம்புகள் உலா வருகின்றன.

விஷ பாம்புகளுக்கும் கட்டுமான கழிவுகளுக்கும் மத்தியில் நடந்து செல்கிறோம். பெண்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதை அறிந்தும் ரயில்வே நிர்வாகம் பயணிகள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் உள்ளது. உடனடியாக, மாற்றுப் பாதையை ஏற்படுத்த வேண்டும். மேலும், 4-வது பாதை பணி காரணமாக, வேளச்சேரி – சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே மின்சாரரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், போக்குவரத்து இணைப்பு வசதிக்காக, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து தலைமைச் செயலகம் வர போதிய பேருந்து வசதி இல்லை. எனவே, கூடுதல் பேருந்து சேவையை இயக்க வேண்டும்" என்றார்.

இது குறித்து, சென்னை கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "எழும்பூர்-கடற்கரை இடையே 4-வது பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகள் வசதி தொடர்பாக,ரயில்வே உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். கூடுதல் பேருந்து வசதி குறித்துசென்னை மாநகர போக்குவரத்து கழகஅதிகாரிகள் கூறும்போது, “சிந்தாதிரிப்பேட்டை – தலைமைச் செயலகத்துக்கு 3 பேருந்துகளை கொண்டுதொடர்ச்சியாக சேவை வழங்கப்படுகிறது. அந்த ரயில் நிலையத்தில் 20 நிமிடத்துக்கு ஒரு ரயில் வந்து சென்ற வண்ணம் இருக்கும். இதை கணக்கிட்டு பேருந்து சேவை வழங்கப்படுகிறது. பயணிகளின் நலன் கருதி, தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்