பஸ்ஸுக்குள் குடை, ஆட்டம் காணும் இருக்கை, சிக்னலில் கைவிடும் கியர்... - சாதாரண கட்டண பேருந்துகள் @ சென்னை

By ஸ்ரீ. பாக்யலஷ்மி ராம்குமார்

சென்னை: சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில்தான் பெண்களுக்கு கட்டணமில்லா பயணசேவை திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சாதாரண கட்டண பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த கட்டணமில்லா பேருந்துகளை, பெண் பயணிகள் எளிதில் அடையாளம் காணும்வகையில் முன்பின் பக்கங்களில் பிங்க் நிறம் பூசப்பட்டது. ஆனால், இந்த பேருந்துகள் பழுதான வகையில் இருப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பயணி கு.நந்தினி என்பவர் கூறியதாவது: கட்டணம் குறைவு என்பதாலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்பதாலும்சாமானிய மக்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என பெரும்பாலானோர் சாதாரண கட்டண பேருந்தையே நம்பி இருக்கின்றனர். 55 பேருக்கான இருக்கை வசதி கொண்ட பேருந்தில் 150 பேர் பயணம்செய்கின்றனர். ஆனால், பேருந்துகளின்தரம் என்பது முற்றிலும் கேள்விக்குறியாக இருக்கிறது. பேருந்து படிக்கட்டுகள் முழுக்க ஒட்டுபோடப்பட்டுள்ளன. இருக்கைகளின் பின் இருக்கும் கம்பிகள் துருப்
பிடித்து இருக்கின்றன.

இது, நின்று கொண்டே பயணம் செய்யும் பயணிகளின் அவசரத்துக்கு பிடித்தால் கூட கீறலை உண்டாக்கி விடுகின்றன. மேலே இருக்கும் கம்பிக்கு அருகில் உள்ள கைப்பிடியை பிடிக்கலாம் என்றால் கைப்பிடியும் அறுந்து பற்றுதல் இன்றி தொங்கிக் கொண்டுள்ளது. சிக்னலில் பேருந்து நிற்கும்போது, பச்சை விளக்கு எரிந்தவுடன் பேருந்தை இயக்க முற்பட்டால், அது அசைய மறுக்கிறது. பேருந்தில் ஏறி ஜன்னல் ஓர சீட்டைபிடித்து அமர்ந்தால், இருக்கை ஆடுகிறது. இது மாட்டு வண்டியில் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது.

ஜன்னலை மூடலாம் என்று முயற்சி செய்தேன். மூட முடியவில்லை ஜன்னலின் கண்ணாடி பழுதாகியிருந்தது. சாரல்தானே என்று நினைத்தால் மேற்கூரையில் இருந்து தண்ணீர் பேருந்தின் உள்ளே கொட்டியது. இதனால், குடை பிடித்தவாறே பயணிக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டோம். இந்த ஒரு பேருந்து மட்டுமல்ல பல பேருந்துகளிலும் இதேநிலைதான். தற்போது மழை தொடர்ச்சியாக பெய்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நான் பயணித்த பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் இருக்கைகள் இருந்தும் பயணிகள் அத்தனை பேரும் நின்று கொண்டே பயணித்ததை பார்த்தேன்.

அண்மையில் அலுவலகத்துக்கு டிப்டாப்பாக உடை அணிந்து பேருந்தில் ஏறினேன். இறங்கும்போது இருக்கையில் இருந்த அழுக்கு உடையில் ஒட்டிக்கொண்டது. எனக்காவது பரவாயில்லை பக்கத்தில் இருந்தவர் இறங்கு வதற்காக எழுந்தபோது இருக்கையில் நீட்டிக் கொண்டிருந்த கம்பி அவரது ஆடையை கிழித்துவிட்டது. எனவே, சாதாரண கட்டணத்தில் இயக்கப்படும் பேருந்துகளை பழுதுநீக்கி இயக்க வேண்டும். அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும் பேருந்துகளை சாதாரண கட்டண சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து ஓட்டுநர் ஒருவர் கூறும் போது, "பேருந்தின் பிரேக், கியர் சரியாக இயங்கும் நிலையில் இல்லாததால் மிகவும் பயந்து பயந்து பேருந்தை இயக்க வேண்டி இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் சிறிது நேரம் நிற்கும்போதும், சாலையில் சென்று கொண்டிருக்கும்போதும் பேருந்து நின்றுவிடும். ஒருமுறை பாலம் மீது ஏறும் திறன் இன்றி நின்றுவிட்டது. கல்லூரி மாணவர்கள் சிலர் இறங்கி பேருந்தை தள்ளிய பிறகு பேருந்து நகர்ந்தது. மழைக்காலங்களில் பேருந்தின் கண்ணாடியில் படும் தண்ணீரை துடைக்கும் வைஃபர் சரியாக செயல்படாது.

அதனால் பேருந்தை ஓட்டிக் கொண்டே துணியால் கண்ணாடியை துடைக்கிறோம். ஒருமுறை பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறங்குவதற்காக, கதவை திறக்கும் பொத்தானை அழுத்துகிறேன், கதவு திறக்கவே இல்லை. பேருந்து கதவை மூடாமல் சென்றால் அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக கதவை மூடாமல் இயக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இது ஓட்டுநர்களின் பிரச்சினை மட்டுமல்ல, பயணிகளின் பாதுகாப்புக்கான அம்சங்கள். எனவே, இதுபோன்ற விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மாநகர பேருந்துகளின் தரத்தை உயர்த்த வேண்டும்" என்றார்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சாதாரண கட்டண பேருந்துகளைப் பொருத்தவரை சேவைகள் குறைக்கப்படவில்லை. திட்டமிட்டபடி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சிவப்பு நிற பேருந்துகளை இயக்கக்கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. ஏற்கெனவே, பிங்க் நிறம் பூசும் திட்டமிருந்ததால் அந்த வகையில் பேருந்துகளை இயக்கி வருகிறோம். அதேநேரம், சாதாரண கட்டணம் என குறிப்பிட்டு சிவப்பு நிற பேருந்துகளையும் இயக்கி வருகிறோம். பேருந்துகளைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம். அதில் பழுதுகள் கண்டறியப்பட்டால் நீக்குகிறோம். புதிய பேருந்துகள் விரைவில் வாங்கப்பட இருப்பதால் 15 ஆண்டுகளாக இயங்கி வரும் பேருந்துகள் அடுத்த ஆண்டு கழிவு செய்யப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE