இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: 5.2 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி நிறைவு என தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், தற்போது வரை 5.2 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 43 கி.மீ. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அதிகபட்சமாக மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் 26.7 கி.மீ. தொலைவுக்குச் சுரங்கப்பாதை அமைகிறது. மாதவரத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுதவிர, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், தற்போது வரை 5.2 கி.மீ. வரை சுரங்கப்பாதை பணி நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: தினமும் தினமும் 10 மீட்டர் சுரங்கம் இரண்டாம் கட்ட திட்டத்தில் சுரங்கப்பாதை பணிக்காக, மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தற்போது 15 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தயாராக உள்ளன. இவற்றில் 11 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது வரை 5.2 கி.மீ. வரை சுரங்கப்பாதை பணி நிறைவடைந்துள்ளது.

ஒவ்வொரு சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரமும், தினமும் 10 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதையை அமைக்கிறது. அந்த வகையில், மாதவரம் பால் பண்ணை-மாதவரம் நெடுஞ்சாலை வழித்தடத்தில் 1,400 மீட்டர் (1.4 கி.மீ.) தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர,பசுமை வழிச்சாலை - அடையாறு சந்திப்பு, கலங்கரை விளக்கம்–திருமயிலை, சேத்துப்பட்டு-நுங்கம்பாக்கம் உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. 4-வது வழித்தடத்தில், மொத்தம்: 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தத் தயாராக உள்ளன. தற்போது, ஒரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் இந்த மாத இறுதியில் பயன்படுத்தப்படும். அடுத்த 2 இயந்திரங்கள் தயாராக இருக்கின்றன. அனைத்து பணிகளையும் வரும் 2028-ம் ஆண்டில் முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE