திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு அமலாக்கத் துறை சம்மன்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக எம்.பி. கதிர் ஆனந்த், வரும் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ.11.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இப்பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருந்ததாக தகவல் வெளியானது.இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா எனவும் விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில், கதிர் ஆனந்த் தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் தற்போது முடுக்கிவிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது திமுக எம்.பி.யாக உள்ள கதிர் ஆனந்த் வரும் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

பொன்முடிக்கும் சம்மன்: இதேபோன்று, அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கில் வரும் 30-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் அவர் ஏற்கெனவே 2 முறை விசாரணைக்கு ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE