செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையை தொடங்க வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: செய்யாறு அருகே சிப்காட் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-வது அலகு விரிவாக்கம் செய்ய, மேல்மா உட்பட 9 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து 124 நாட்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. எதிர்ப்பு காரணமாக ஒருங்கிணைப்பாளர் அருள் தவிர, மற்ற 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

வேலைவாய்ப்பு... மேலும், கைது செய்யப்பட்ட 20 விவசாயிகளையும், திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது. இந்நிலையில், சிப்காட் தொடங்கி, வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி, மேல்மா கூட்டுச்சாலையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், நிலங்களை கையகப்படுத்தி, சிப்காட்டை தமிழக அரசு விரைவாக தொடங்கி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சிப்காட் தொழிற்ேபட்டை தொடங்குவதற்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் போராடி வரும் நிலையில், சிப்காட் வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE