செஞ்சி புதிய பேருந்து நிலையத்தை எப்ப திறப்பீங்க..?

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: செஞ்சியில் பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு, ரூ. 6.74 கோடியில் நவீன பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த 2022-ம் ஆண்டு, மே மாதம் தொடங்கியது. அனைத்து பணிகளும் கடந்த மாதம் நிறைவடைந்தன. ஆனாலும் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய பேருந்து நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. புதிய பேருந்து நிலைய வளாகம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அப்படியே இருக்கிறது. இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. இதனால் பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்பே சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கிறது.

தற்போது உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து செஞ்சி நகருக்குள் வந்து செல்ல நீண்ட தொலைவு செல்ல வேண்டியது உள்ளது. தற்காலிக பேருந்து நிலையம் இயங்குவதால் திண்டிவனம் - திருவண்ணாமலை புறவழிச்சாலை பணிகளும் பாதிக்கின்றன. இதனால் புதிய பேருந்து நிலையத்தை எப்போது திறப்பார்கள் என்று செஞ்சி பேரூராட்சி மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து செஞ்சி பேரூராட்சி அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, “தமிழகத்தில் 7 இடங்களில் புதிய பேருந்து நிலையப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் நிறைவடைந்ததும், ஒரே நேரத்தில் அனைத்துப் பேருந்து நிலையங்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் இங்கு திறப்பதில் தாமதம் நிலவுகிறது’‘ என்கின்றனர். இது தொடர்பாக தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் மஸ்தானிடம் கேட்டபோது, “தமிழக முதல்வர் காணொலி மூலம் இப்பேருந்து நிலையத்தை திறந்து வைத்தால் எங்களுக்கு பெருமை. அவரை நேரில் சந்தித்து, இதுபற்றி கோரிக்கை வைக்க உள்ளேன். முதல்வரின் ஆணைப்படி விரைவில் திறக்கப்படும்”என்றார்.

மேலும் சில சட்டச் சிக்கல்களால் பேருந்து நிலையம் திறப்பில் தாமதம் நிலவுவதாக நகருக்குள் பேசப்படுவது குறித்து அமைச்சரிடம் கேட்டதற்கு, “மிகமிகத் தெளிவாக திட்டமிட்டு, சிறப்பான முறையில் இந்த புதிய பேருந்து நிலையத்தை கட்டியிருக்கிறோம். அப்படி எந்த ஒரு சிக்கலும் இல்லை. மேலே சொன்ன காரணத்தை தாண்டி, எந்த ஒரு காரணத்தாலும் தாமதமாகவில்லை” என்று தெரிவித்தார். செஞ்சியில் புதிய பேருந்து நிலையத்தை திறப்பதற்கு முன்பாக, அங்குள்ள கடைகளை ஏலம் விடுவது போன்ற பணிகளை முறையாக முன்னரே முடிக்க வேண்டும். பேருந்து நிலையத்துக்குள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என இப்பேரூராட்சி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE