அந்தமானில் நவ.26-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

By செய்திப்பிரிவு

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் வரும் 26-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் 26-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 27-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தின் உள் பகுதி மற்றும்அதையொட்டிய கேரளப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் (நவ. 23, 24) பெரும்பாலான இடங்களிலும், வரும் 25-ம் தேதி சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 26முதல் 28-ம் தேதி வரை லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

திருப்பூரில் அதிக மழை: நேற்று (நவ. 22) காலை 8.30மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.15 இடங்களில் கனமழையும், 5 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 17 செ.மீ.,திருப்பூர் மாவட்டம் அவினாசி,மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 14 செ.மீ., கடலூர் மாவட்டம்பரங்கிப்பேட்டையில் 13 செ.மீ.,விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 12 செ.மீ., நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 11 செ.மீ., விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 செ.மீ., காரைக்காலில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்குக் பருவமழை காலத்தில் இதுவரை 24 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 15 சதவீதம் குறைவாகும்.

அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகாரணமாக தெற்கு மற்றும் அதையொட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 26-ம் தேதி மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE