அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 2 இடங்களில் வருமான வரி சோதனை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை/ கல்பாக்கம்: திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி, கல்பாக்கம் அருகே ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் தொழிலதிபர் ராஜபிரகாஷ் வீடு ஆகிய 2 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூர் கிராமத்தில் அருணை கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்கள், அவரது மகன் கம்பன் வீடு, ஒப்பந்ததாரர் வெங்கட் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரி துறையினர் கடந்த 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சோதனை மேற்கொண்டனர்.

இதில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு, பாரத ஸ்டேட்வங்கி மூலம் வருமான வரி துறையின் கணக்கில் செலுத்தப்பட்டது. சொத்து பத்திரங்கள், தொழில்முதலீட்டு ஆவணம் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனையின்போது, அருணை மருத்துவக் கல்லூரியில் உள்ள 3 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும், அவற்றில் முக்கிய ஆவணங்கள், கணினிபதிவு தரவுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அருணை கல்வி நிறுவன வளாகத்துக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் 3 கார்களில் வருமான வரி துறை அதிகாரிகள் 6 பேர் நேற்று வந்தனர். சீல் வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கு சென்ற அவர்கள், அங்குள்ள ஆவணங்கள், கணினி தரவுகளை மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.

2 வார இடைவெளியில், 2-வதுமுறையாக இங்கு வருமான வரி துறையினர் மீண்டும் நேற்று சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபர் வீட்டில்..: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜபிரகாஷ். இவர் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது வீட்டுக்கு நேற்று காலை 11 மணிஅளவில் 3 கார்களில் வருமான வரி துறையினர் 7 பேர் வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தொழிலதிபரான ராஜபிரகாஷ், ரியல் எஸ்டேட் தொழில் மூலம்பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அறிமுகமானதாக கூறப்படுகிறது. இதன்மூலம், பல்வேறு இடங்களில் ராஜபிரகாஷ் நிலம் வாங்கி கொடுத்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில் இந்த சோதனை நடந்ததாகவும் தெரிகிறது.

இரவு வரை சோதனை: 2 இடங்களிலும் இரவு வரை சோதனை நீடித்தது. முழுமையாக சோதனை முடிந்த பிறகே, இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படும் என்று வருமான வரிதுறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE