மாநில உரிமைகளை மீட்டெடுக்கவே சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

By செய்திப்பிரிவு

சேலம்: மாநில உரிமைகளை மீட்டெடுக்கவே சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடத்தப்படுவதால், இளைஞர்களே உரிமைகளை வென்றெடுக்க ஒன்று திரள்வோம், என சேலத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன் பாளையத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு டிசம்பர் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து தமிழகம் முழுவதும் மாவட்டந் தோறும் சென்று திமுக மாநில இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

இதன்படி, சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் கூட்டம் சீலநாய்க்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கூட்டத்தில் எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் டிஎம் செல்வகணபதி, எஸ்ஆர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது: சேலம், பெத்த நாயக்கன்பாளை யத்தில் வரும் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறும் மாநில மாநாடு எழுச்சியோடு வெற்றி மாநாடாக அமைய அனைத்து இளைஞரணி நிர்வாகிகளும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றினாலும், சேலத்தில் தற்போது நடைபெற்ற மாநில இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் பிரம்மாண்ட முறையில் மாநாடு போல அமைந்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னையிலிருந்து திருவாரூருக்கு ரயிலில் சென்றதாக தெரிவிக்கின்றனர். ஆனால், அவர் திருவாரூரில் இருந்து கோவைக்கும் பின்னர், சேலத்துக்கும் வந்து திரைப்படக் கதை ஆசிரியராக பணியாற்றிய பிறகு தான் சென்னை சென்றார் என்ற வரலாறு தெரியாமல் பேசுகின்றனர்.

சேலத்தில் நடைபெறவுள்ள மாநாடு தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் மாநாடாக நடப்பதால், இளைஞர்களே உரிமைகளை வென்றெடுக்க ஒன்று திரள்வோம். மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய நிதி உரிமை , கல்வி உரிமை ஆகியவற்றை மீட்டெடுக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய வேண்டும். எனவே, அனைத்து நிர்வாகிகளும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு பங்கேற்று மாநாட்டை வெற்றிகரமாக வழி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE