சென்னை: ஆசியாவின் 2-வது மிகப்பெரிய கடற்கரையாக மெரினா விளங்குகிறது. சென்னை மாநகருக்கு கல்வி, வேலை, குடும்ப சுப நிகழ்ச்சிகள் நிமித்தமாக சென்னை வருவோர், மெரினா கடற்கரைக்கு வராமல் சொந்த ஊர் திரும்புவதில்லை. அந்த அளவுக்கு உள்நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினரையும் மெரினா கடற்கரை வெகுவாக கவர்ந்துள்ளது. இக்கடற்கரைக்கு தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விழாக்காலங்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் குவிகின்றனர். இதற்கு இணையாக வரலாற்று புகழ் பெற்றதாக பெசன்ட்நகர் கடற்கரை விளங்குகிறது.
மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைகளில் மக்கள் வரத்துக்கு ஏற்ப, உணவகங்களின் எண்ணிக்கையும் 1500-க்கு மேல் அதிகரித்துள்ளது. அவற்றிலிருந்து உருவாகும் குப்பைகளும் அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் முறையான திடக்கழிவு மேலாண்மை அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு இல்லாததாலும், பொதுமக்களின் அலட்சியத்தாலும் தினமும் இக்கடற்கரைகள் குப்பை சிதறல்களாக காட்சியளிக்கின்றன. இதை கையால் அகற்றி அலுத்துபோன மாநகராட்சி, கடற்கரையை சுத்தம் செய்ய, கடந்த 2018-ம்ஆண்டு தலா ரூ.86 லட்சம் செலவில், டிராக்டரில் பொருத்தப்பட்ட அமெரிக்க தயாரிப்பான 8 இயந்திரங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறது. தற்போது ரூ.1 கோடி செலவில் மேலும் ஒரு இயந்திரத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள 8 இயந்திரங்களில் 5இயந்திரங்கள் மெரினாவிலும், 2 இயந்திரங்கள் பெசன்ட்நகரிலும், ஒரு இயந்திரம், பாலவாக்கம் போன்ற பிற கடற்கரை பகுதிகளிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இவற்றை இயக்கினாலே பிளாஸ்டிக் குப்பைகள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட 99 சதவீத குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டுவிடுகின்றன. இந்நிலையில் பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், கடற்படை, கடலோர காவல் படை உள்ளிட்ட பாதுகாப்பு துறைகள் போன்றவை, பிரதமரின் தூய்மை இந்தியா இயக்க அறிவிப்பு மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த தினங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தினங்களில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் குப்பைகளை அகற்ற மாநகராட்சியிடம் அனுமதி கோரி வருகின்றன.
மாநகராட்சி சார்பில் தினமும் இயந்திரங்களை கொண்டு ஒரு மணி நேரத்துக்குள் மொத்த குப்பைகளையும் அகற்றிவிடும் நிலையில், இதுபோன்ற குப்பை அகற்ற வரும் தன்னார்வலர்களுக்கு கையால் அகற்ற அனுமதி கொடுத்து வருகின்றனர். அன்றைய தினம் தன்னார்வலர்கள் குப்பைகளை அகற்ற ஏதுவாக இயந்திரங்கள் மூலம் குப்பைகளை மாநகராட்சி அகற்றாமல் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்ட, மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி, அனைவரும் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று ஏராளமான நிறுவனங்கள் கடற்கரைகளில் மட்டும் குப்பைகளை அகற்ற அனுமதி கோரி சென்னை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கின்றன.
சென்னை கடற்கரைகளில் இயந்திரங்கள் குப்பைகளை அகற்றிவிடும் நிலையில் இந்த தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணியால் பெரிதாக பயன் ஏதும் இல்லை. மேலும், தன்னார்வ பணிக்கு குழுவாக வரும்போது, குடிநீர் அருந்தவும், குளிர்பானங்கள் அருந்தவும் இவர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள், காலை உணவை கொண்டு வரும் பிளாஸ்டிக் மற்றும் பாக்குமர தட்டுகள் போன்றவை புதிதாக குப்பைகளை உருவாக்கிவிடுகின்றன. எனவே, இத்தகைய நடவடிக்கைகளுக்கு மாநகராட்சி அனுமதி வழங்குவதை தவிர்க்கலாம்.
அதற்கு பதிலாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தால் தூய்மைப்படுத்தப்படாத பல பகுதிகள் உள்ளன. குறிப்பாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகள், அவற்றை சுற்றியுள்ள பகுதிகள் குப்பைகளாக, அசுத்தத்தின் பிடியில் சிக்கிஉள்ளன. அப்பகுதிகளை தூய்மையாக்க இதுபோன்ற தன்னார்வலர்களை பயன்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "தூய்மை பணி மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து வரும் தன்னார்வலர்கள் கடற்கரையை மட்டும்தான் கேட்கின்றனர். பிற பகுதிகளை தூய்மைப்படுத்துமாறு அவர்களை நிர்பந்திக்க முடியாது" என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago