நாடாளுமன்ற தேர்தலின்போது ஏற்படப்போகும் தேவையை பூர்த்தி செய்ய மின்சாரம் கொள்முதல்: டெண்டர் கோரியது மின்சார வாரியம்

By செய்திப்பிரிவு

சென்னை: அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் டெண்டர் கோரி உள்ளது. தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவாக உள்ளது. இத்தேவையைப் பூர்த்தி செய்ய மின் வாரியம் தனது சொந்த உற்பத்தியைத் தவிர, மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்கிறது. அடுத்த ஆண்டு கோடை வெயிலுடன், 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. எனவே, கடந்த ஏப்ரலில் 19 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்த தினசரி மின்தேவை அடுத்த ஆண்டு 20 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்த மின்தேவையைப் பூர்த்தி செய்ய 2024 மார்ச் 1 முதல் 31-ம் தேதி வரை தினமும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய கடந்த மாதம் மின்வாரியம் டெண்டர் கோரியது. மேலும், வரும் டிசம்பர் 1 முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை ஆயிரம் மெகாவாட்டும், மாலை 6 மணி முதல் 9 மணி வரை 2,200 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்ய கடந்த அக்டோபரில் மின்வாரியம் டெண்டர் கோரியது. இவை தவிர, 2024 மார்ச் முதல் மே மாதம் வரை தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை 2 ஆயிரம் மெகாவாட்டும், 2024 ஏப்ரல் மாதம் மட்டும் காலையில் தினமும் 500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டது.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசுகளும் மின்சாரம் வாங்க பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துவருகின்றன. இதனால், மின்சாரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்துக்கு மின்சாரம் வழங்க ஒரு நிறுவனமும் முன்வரவில்லை.இதையடுத்து, 2024 ஜன.1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை 850 மெகாவாட்டும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆயிரம் மெகாவாட்டும் மின்சாரம் வாங்க மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது. இதுதவிர, ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்களுக்கு 24 மணி நேரமும் 200 மெகாவாட் மின்சாரம் வாங்கவும் மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE