விவசாயிகள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: விவசாயிகளின் நலனில் தொடர்ந்து அக்கறையின்றி திமுக அரசு செயல்படுவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை 11மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குண்டர் தடுப்பு சட்டத்தை திரும்பபெற விவசாயிகளின் குடும்பங்களை மிரட்டி பெற்ற நிபந்தனை கடிதங்களை திரும்ப தர வேண்டும், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தமிழ் பேரரசு கட்சி நிறுவனர் இயக்குநர் கவுதமன்,அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேசன், முன்னாள் எம்எல்ஏதமிமுன் அன்சாரி உட்பட பலர்போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக போராட்டத்துக்கு வந்த விவசாயிகளை போராடுவதற்கு முன்னரே, போலீஸார் கைதுசெய்து காவல் வாகனத்தில் ஏற்றினர். இதற்கு பி.ஆர்.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் நலனின் தொடர்ந்துஅக்கறையின்றி திமுக அரசு செயல்படுகிறது. மேலும், விவாசாயிகள்தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றனர். விவசாயிகள் என்ன குண்டர்களா? எதற்கு விவசாயிகள் மீது இந்த சட்டம் பாய வேண்டும்.

மேல்மா சிப்காட் விவகாரத்தில் போராடிய அனைவரது மீதும் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்த அத்தனை அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் போராளிகளுக்கு தடை விதிக்கும் அமைச்சர் எ.வ.வேலு மிரட்டலை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE