தேசிய பழங்குடியின இளைஞர் பரிமாற்றம் சென்னையில் இன்று ஆளுநர் தொடங்கி வைக்கிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி நேருயுவகேந்திரா குழுமத்தின் (சங்கதன்) மாநில இயக்குநர் குன்ஹம்மது, சென்னை பிரிவு துணை இயக்குநர் ஜெ.சம்பத் குமார் ஆகியோர் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிதியுடன் நேரு யுவகேந்திரா குழுமம் சார்பில், 15-வது தேசிய பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள அரசினர் இளைஞர் விடுதி திறந்தவெளிஅரங்கில் புதன்கிழமை (நவ.22) தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சி ஒரு வாரத்துக்கு நடத்தப்பட உள்ளது. ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகியமாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் 200 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி நிலையில் பயிலும் 25 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொள்வார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குஇந்த பழங்குடியின இளைஞர்கள்சென்று மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை, மொழி ஆகியவற்றை அறிந்து கொள்வதோடு தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை முன்னேற்றங்களை நேரிடையாக பார்வையிடுவார்கள். இதன்மூலமாக, பழங்குடி சமூகங்களில் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகள், சமூக, பொருளாதார மேம்பாடு ஆகியவை குறித்துவிழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

நிபுணர்களின் கல்வி அமர்வுகள்,பாரம்பரிய நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, கலாச்சாரப் போட்டிகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவை உறுப்பினர் ஜே.எம்.எச்.அசன் மவுலானா முன்னிலை வகிப்பார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டிஐஜி எம்.தினகரன் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள்.நிறைவுவிழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE