கடந்த 6 ஆண்டுகளாக பாதை தெரியாமல் பயணித்தேன்: அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் கருத்து

By எஸ்.ஸ்ரீனிவாசகன்


மதுரை: கடந்த 6 ஆண்டுகளாக பாதை எங்கு செல்கிறது என்றே தெரியாமல் சுற்றி, சுற்றி நடந்து கொண்டே இருந்தோம். தற்போது செல்லும் பாதை எந்த இடத்துக்குச் செல்கிறது என்பதை அறிந்து பயணிக்கிறோம், என அமமுக-விலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் கூறினார்.

உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஐ.மகேந்திரன். அமமுக தலைமைக் கழக செயலாளர், புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்தார். 2006 தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் டிடிவி.தினகரன் தொடங்கிய அமமுகவில் இணைந்து, 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் 2021-ல் உசிலம்பட்டி தொகுதியிலும் மகேந்திரன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். டிடிவி. தினகரனின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக இருந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி முன்னிலையில் மகேந்திரன் அதிமுகவில் இணைந்தார்.

இது குறித்து மகேந்திரனுக்கு நெருக்கமானோர் கூறுகையில், ‘2 தேர்தல்கள், பல ஆண்டுகள் என கட்சிக்காக சொந்தப் பணத்தை தொடர்ந்து செலவிட்டார். இனியும் கட்சியால் எதிர்காலம் இல்லை என்ற சூழலில் சில உறுதி மொழியின் அடிப்படையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இது அவரின் அரசியலுக்கு பலனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.

அதிமுகவினர் கூறியது: ஆர்.பி.உதயகுமாரின் மிக முக்கியமான அரசியல் நடவடிக்கை இது. தென் மாவட்டங்களில் முக்குலத்து சமூகத்தினரில் சிலர் அதிமுகவுக்கு எதிராக உள்ளதாக தகவல் பரப்பப்படுகிறது. இந்தச் சூழலில் மகேந்திரன் அதிமுகவில் இணைந்தது இந்த சமூகத்தினர் அதிமுகவுக்கு எதி ரான மனநிலையில் உள்ளதாக வரும் தகவல்கள் மாயை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.

எம்பி அல்லது எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, மாவட்டச் செயலாளர் பதவி ஆகிய உறுதிமொழிகள் அதிமுக தரப்பில் மகேந்திரனுக்கு வழங்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் எம்பி தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டால் அவருக்கு மட்டுமின்றி திமுக கூட்ட ணிக்கும் பதிலடி தர மகேந்திரன் சரியான தேர்வாக இருப்பார்’ என்றனர். அமமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்பதில் சந் தேகமே இல்லை. கட்சி தனது செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றார்.

கோட்டைவிட்ட திமுக - இது குறித்து திமுகவினர் கூறியதாவது: மகேந்திரனின் செல்வாக்கால் உசிலம்பட்டி ஒன்றியத்தில் 2019-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 2 பேர் வென்றனர். இவர்கள் தயவில்தான் ஒன்றியத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் பதவிக்குக்கூட முதல்வர் அறிவித்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியவில்லை. மகேந்திரனை திமுகவில் சேர்க்க 2021 தேர்தலுக்கு முன்பு பேச்சு நடந்தது. ஆனால், அவர் தயங்கினார்.

தற்போதைய சூழலைப் பயன்படுத்தி திமுகவில் சேர்த்திருந்தால் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக வலுவாகியிருக்கும். திமுகவுக்கு இழுக்கத் தவறியதன் மூலம் மகேந்திரனை கோட்டை விட்டதாகவே கருதுகிறோம். வரும் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் கடும் போட்டியைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

இதற்கிடையே, உசிலம்பட்டியில் நேற்று தன்னை சந்தித்த ஆதரவாளர்களிடம் மகேந்திரன் பேசியதாவது: "அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். விரைவில் உசிலம்பட்டிக்கு வர உள்ளார். அப்போது அனைவரையும் நேரில் சந்திப்போம். எனக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். நல்ல இயக்கத்தில் பயணிக்கிறோம். தற்போது செல்லும் பாதை எந்த இடத்துக்குச் செல்கிறது என்பதை அறிந்து பயணிக்கிறோம்.

இதற்கு முன்பு 6 ஆண்டுகளாக பாதை எங்கு செல்கிறது என்றே தெரியாமல் சுற்றி, சுற்றி நடந்து கொண்டே இருந்தோம். ஒவ்வொரு தேர்தலிலும் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்குத் தெரியும். வரும் தேர்தலைத் தான் நாங்கள் சந்திக்க முடியும். பின்னர் இளைஞர்களுக்கு வழிவிடுவோம், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE