“நீட் தேர்வு ரத்தை நோக்கி திமுக செயல்படுகிறது” - உதயநிதி ஸ்டாலின்

By கி.பார்த்திபன்

நாமக்கல்: “நீட் தேர்வு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமான ஏழை மாணவர்களால் மருத்துவக் கல்வி பெற முடியும். அதை நோக்கி தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது” என விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துச் சேவை தொடக்க விழா நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ சேவையை தொடங்கி வைத்துப் பேசியதாவது: “நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி மருத்துவ சேவையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எல்லோரும் தினந்தோறும் நன்றாக விளையாடினால் தான், உடற்பயிற்சி செய்தால் தான் எதிர்காலத்தில் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழ முடியும். அதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான பணிச்சுமையை குறைக்க முடியும். அதனால் தான் சுகாதாரத் துறை அமைச்சர் என்னை அழைத்து இந்த மருத்துவச் சேவையை தொடங்கி வைக்கச் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் பல மருத்துவர்களை உருவாக்கியது நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகள் தான். நீட் தேர்வு இல்லாமல் இருந்தால், இன்னும் அதிகமான ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களால், மருத்துவக் கல்வி பெற முடியும். அதை நோக்கி தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்கின்றனர்.

ஆனால், இந்த மாவட்டத்துக்கென்று ஒரு அரசு மருத்துவக் கல்லூரி இல்லாமல் இருந்தது. தற்போது நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சேவைகள் தொடங்கப்படுவதன் மூலம் அந்தக் குறை நீக்கப்படுகிறது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மக்கள் நல்வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. நகரப் பகுதிகளில் வாழுகிற மக்களுக்கு இருக்கிற மருத்துவ வசதிகள் கிராமப்புறங்களில் வாழுகிற மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

மருத்துவச் சேவையைத் தேடி மக்கள் வருவதைக் காட்டிலும் மக்களைத் தேடி மருத்துவச் சேவைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையில் தான், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. சமுதாயத்தை பாதிக்கிற நோய்களைத் தீர்ப்பதற்காக நூலகங்களையும், மக்களை பாதிக்கிற நோய்களை தீர்ப்பதற்காக மருத்துவ வசதிகளையும் அரசு ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில், தமிழ்நாட்டில் இருக்கிற சுகாதார வசதிகளைப் பார்த்து குஜராத்தில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் ஆச்சரியத்தோடு பாராட்டி சென்றனர். இது தான் திராவிட மாடல்” என்றார்.தொடரந்து 2,513 பயனாளிகளுக்கு ரூ.16.52 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ச.உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE