கோவை | மூழ்கும் பாலங்கள்... முடிவே கிடையாதா?

By இல.ராஜகோபால்

கோவை: கோவையில் மழைக் காலத்தில் பாலங்களின் கீழ்பகுதியில் தேங்கும் மழை நீரை அகற்ற அதிக திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்துவது மட்டுமின்றி, நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கோவை மாநகரில் கனமழை பெய்தால் அவிநாசி சாலை மேம்பாலத்தின் சுரங்கப் பாதை, பெரிய கடைவீதி லங்கா கார்னர் ரயில்வே பாலம், காட்டூர் காளீஸ்வரா மில் ரயில்வே பாலம், ஆர்.எஸ்.புரம் கிக்கானி பள்ளி ரயில்வே பாலம் ஆகியவற்றின் கீழ் பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து தடைபடுகிறது.

அவிநாசி சாலை சுரங்கப்பாதை, காட்டூர் பாலம், கிக்கானி பாலம் ஆகியவை கிட்டதட்ட மூழ்கிவிடுகின்றன. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலம் காலமாக நிலவி வரும் இப்பிரச்சினைக்கு இதுவரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நிரந்தர தீர்வு காணப்படவில்லை. தண்ணீர் அதிகளவு தேங்கினால் பம்ப்செட் தொழில் நிறுவனங்கள் உதவியுடன் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கோவையில் ஆய்வு செய்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் பொதுப்பணித்துறை வசம் உள்ள 100 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் பம்ப்செட்களில் சிலவற்றை கோவைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி, அவிநாசி சாலை சுரங்கப்பாதை, லங்கா கார்னர் பாலம் ஆகிய இடங்களில் 100 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் தேங்கும் தண்ணீர் விரைவாக வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு கோவை மாநகராட்சி பல விருதுகளை தேசிய அளவில் பெற்றுவரும் நிலையில் லங்கா கார்னர், உப்பிலிபாளையம் உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் பல ஆண்டுகளாக தொடரும் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்காதது வருந்தத்தக்கது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாயை குளங்கள், பூங்காக்களை மேம்படுத்த மட்டும் பயன்படுத்தாமல், முக்கிய பிரச்சினையான மழைநீர் தேக்கத்துக்கு தீர்வு காணவும் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

லங்கா கார்னர் பாலத்தில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற
அமைக்கப்பட்டுள்ள ராட்சத மோட்டார்.
படம்: ஜெ.மனோகரன்.

சென்னையில் இருந்து தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 100 ஹெச்பி மோட்டார் பம்ப் தண்ணீரை அகற்ற உதவும் என்ற போதிலும் லங்கா கார்னர், உப்பிலிபாளையம், காளீஸ்வரா மில் ரயில்வே பாலம், வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட அதிகளவு மழைநீர் தேங்கும் பகுதிகளில் நீர் வடியும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் அவற்றை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவே மக்களுக்கு பயன் தரும்” என்றனர். இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக், தென்னிந்திய பம்ப்செட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விக்னேஷ் ஆகியோர் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் நேரங்களில் பல இடங்களில் தண்ணீரை அகற்ற தொழில் நிறுவனங்கள் மோட்டார் பம்ப்செட்களை மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கி வருகின்றன. கோவையில் அதிகபட்சமாக 70 ஹெச்பி வரையிலான பம்ப்செட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 100 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் பம்ப், தேங்கும் மழைநீரை விரைவில் வெளியேற்ற உதவும். கூடுதல் பம்ப்செட்கள் தேவைப்பட்டால் வழங்க கோவை தொழில் நிறுவனங்கள் தயாராக உள்ளன” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE