“நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம்” - உதயநிதி பேச்சு

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: நீட் தேர்வு பிரச்சினை என்பது இளைஞரணியின் பிரச்சினை அல்ல. தமிழக மாணவர்களின் பிரச்சினை. நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2600 திமுக மூத்த நிர்வாகிகளுக்கு, தலா ரூ 10 ஆயிரம் வீதம், பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில், பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ''அண்ணா அறிவாலயம் கலைஞர் அறக்கட்டளை சார்பில், மூத்த நிர்வாகிகள் 8 பேருக்கு, மாதம் ரூ 25 ஆயிரம் வீதம் மருத்துவம், கல்வி உதவிக்காக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கலைஞர் அறக்கட்டளை சார்பில் ரூ.5. 50 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இளைஞரணியின் சார்பில் கடந்த 6 மாதத்தில், தலா ரூ 25 ஆயிரம் என ரூ 50 லட்சம் நிதி உதவி அளித்துள்ளோம். கடந்த 2 ஆண்டுகளில் 45 மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 44.76 கோடி ரூபாய் பொற்கிழி வழங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் மாட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறு எந்த இயக்கமும் செய்யாததை திமுக செய்துள்ளது.

கட்சிக்காக உழைத்து ரத்தம் சிந்திய மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது சாதாரண நிகழ்வு அல்ல. ஒவ்வொரு தாத்தாவுக்கும் பேரனாக நான் செய்யும் கடமையாக கருதுகிறேன். பொற்கிழி பெறுவதை விட திமுக துண்டினை தோளில் போடுவதைத்தான் நீங்கள் பெருமையாக கருதுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். கழகத்தின் வரலாறே நீங்கள் தான். நீங்கள் இல்லாவிட்டால் கலைஞர் இல்லை. திமுக இல்லை. இன்றைய முதல்வர் ஆட்சிக்கு வரவும் நீங்கள்தான் காரணம். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரின் மறு உருவமாக கருதி வணக்குகிறேன்.'' இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: ''திமுகவில் பல்வேறு அணிகள் உள்ளன. அவற்றில் முதன்மையான அணி இளைஞர் அணி என கலைஞர் பாராட்டியுள்ளார். உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு திமுக இளைஞரணியை உதாரணமாக காட்ட முடியும். உழைப்பு என்றால் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று கலைஞர் பாராட்டி இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உழைப்பால் உயர்ந்தவர் நமது முதல்வர். யாருடைய காலில் விழுந்தும் முதல்வர் பதவியை பெறவில்லை. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வு பிரச்சினை என்பது இளைஞரணியின் பிரச்சினை அல்ல. தமிழக மாணவர்களின் பிரச்சினை. நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம்.

நீட் தேர்வினால் அரியலூர் அனிதாவில் ஆரம்பித்து 21 பேர் இறந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க 50 லட்சம் கையெழுத்து பெற இயக்கம் நடத்துகிறோம். இதுவரை நேரடியாக 16 லட்சம் கையெழுத்தும், போஸ்ட் கார்டு மூலம் 11 லட்சம் கையெழுத்தும் பெற்றுள்ளோம். டிசம்பர் 17-ம் தேதிக்குள் 50 லட்சம் கையெழுத்து பெறுவோம். நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதுதான் நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. எடப்பாடி பழனிசாமி கூட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நீட் தேர்வினை ரத்து செய்ய மசோதா நிறைவேற்றினார். எனவே, நீங்களும் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று கையெழுத்திடுங்கள். நீட் தேர்வு ரத்தானால், அந்த பெருமையை உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்று நான் சொன்னேன். ஆனால் அவர், இது திமுக நடத்தும் நாடகம் என்று சொல்லிவிட்டார். ஓபிஎஸ். சசிகலாவின் காலை வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி நாடகம் பற்றி பேசக்கூடாது.

ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் கூட பிரதமர் மோடி என்னைப் பற்றிப் பேசுகிறார். நான் எல்லோரும் சமம் என்று பேசினேன். ஆனால், நான் பேசாததை எல்லாம் பேசியதாக அவர் சொல்கிறார். நான் 5 நிமிடம் பேசியதை, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொண்டு சென்றிருக்கிறார். எனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் முடியாது என்று சொல்லி விட்டேன். நான் உண்மையைத்தான் பேசினேன். எந்த வழக்கு வந்தாலும் நான் சந்திக்கத் தயார். திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் தான் வாழும் என்று பேசியிருக்கிறார்.

ஒட்டு மொத்த தமிழக மக்களும் கலைஞர் குடும்பம் தான். அண்ணா, கலைஞரின் கொள்கை வாரிசுகள் நாங்கள். இந்திய தணிக்கைக்குழு அறிக்கையில், 9 ஆண்டு பாஜக ஆட்சியில், 7 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.'' இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்