சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் பறிப்பை கைவிடக்கோரி பாமக நாளை போராட்டம்: அன்புமணி தகவல் 

By செய்திப்பிரிவு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக 11 கிராமங்களிலிருந்து 2700 ஏக்கர் வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக் கோரி நாளை பாமக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக 11 கிராமங்களிலிருந்து 2700 ஏக்கர் வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்த உழவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மக்களின் உணர்வுகளை மதிக்காத தமிழக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. மொத்தம் 2,937 ஏக்கர் பரப்பளவிலான இந்த தொழிற்பூங்காவில் இரு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது அலகை அமைப்பதற்காக 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருக்கிறது. அதில் 361 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் தவிர மீதமுள்ள 2700-க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு சொந்தமான வளமான வேளாண் விளைநிலங்கள் ஆகும்.

செய்யாற்றை ஒட்டிய வட ஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நிலத்தை இழக்க விரும்பாத உழவர்களும், பொதுமக்களும் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து 125 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களை அழைத்து பேச்சு நடத்தி, சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய தமிழக அரசு, அடக்குமுறையை பயன்படுத்தி எதிர்ப்பை ஒடுக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் கடந்த 4-ஆம் தேதி அதிகாலையில் காவல்துறை மூலம் வீடுவீடாக ஆய்வு நடத்தி 27 விவசாயிகளை கைது செய்தது.

சிறையில் அடைக்கப்பட்ட அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது. இரு நிகழ்வுகளுக்கும் நான் தான் முதன் முதலில் கண்டனம் தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் மக்கள் எதிர்ப்பு வெடித்த நிலையில், அதற்கு பணிந்து 6 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற்றது. அத்துடன் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தையும் கைவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முயல்வதை அனுமதிக்க முடியாது.

சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் முப்போகம் விளையும் பூமி ஆகும். இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றின் உரிமையாளர்கள், அந்த நிலங்களை நம்பியுள்ள தொழிலாளர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து விடுவர். அதனால், தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளை மதித்து நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவது தான் மக்கள் நல அரசிற்கு அழகு ஆகும். ஆனால், தமிழக அரசோ, அதனிடமுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நிலத்தைப் பறிக்க துடிக்கிறது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும், வறுமை ஒழிப்பதற்கும் உதவும் தொழில் வளர்ச்சித் திட்டங்களில் சிப்காட் தொழிற்பூங்கா திட்டம் மிகவும் சிறந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அந்த வகையில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவை ஆகும்.

அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதால் அங்கு சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். அத்தகைய தொழிற்பூங்காக்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி, செங்கம், போளூர் போன்ற பகுதிகளில் அரசுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்களில் அமைக்கப்பட்டால், அனைவருக்கும் பயனளிப்பதாக இருக்கும். மாறாக, ஒரு பிரிவினருக்காக அமைக்கப்படும் தொழிற்பூங்கா, விளைநிலங்களைப் பறித்து இன்னொரு பிரிவினரின் வாழ்வாதாரங்களை முடக்கக் கூடாது. தொழிலுக்காக உழவு ஒருபோதும் அழிக்கப்படக் கூடாது. உழவுத் தொழில் காப்பாற்றப்படாவிட்டால், தமிழ்நாட்டு மக்கள் இன்னும் சில ஆண்டுகளில் உணவுக்காக பிற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படும். அதற்கு அரசு வழிவகுக்கக்கூடாது.

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரத்தை அடுத்த மேல்மா கூட்டு சாலையில் நாளை (22.11.2023) காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு பாமக தலைவரான நான் தலைமை ஏற்கிறேன். தமிழ்நாடு உழவர் பேரியக்கம் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு இயக்கங்களின் நிர்வாகிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். பிற உழவர் அமைப்புகள், வேளாண் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அமைப்புகள், சமூக அமைப்புகள், உழவர்கள், வணிகர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாமக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்