மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை: களக்காடு தலையணையில் குளிக்க 4-வது நாளாக தடை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அதிக நீர் வரத்தால் களக்காடு தலையணையில் குளிக்க நேற்று 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள ஊத்து பகுதியில் நேற்று காலை 8 மணி வரையான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 92 மி.மீ.மழை பதிவாகியிருந்தது. மாஞ்சோலை, காக்காச்சி பகுதிகளில் தலா 82 மி.மீ., நாலுமுக்கு பகுதியில் 65 மி.மீ மழை பதிவாகியிருந்தது.

மாவட்டத்திலுள்ள அணைப்பகுதிகளிலும் பிற இடங்களிலும் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 18, சேர்வலாறு- 10, மணிமுத்தாறு- 33.4, நம்பியாறு- 40, கொடு முடியாறு- 68, அம்பாசமுத்திரம்- 27.8, சேரன் மகாதேவி- 40.2, ராதாபுரம்- 67, நாங்குநேரி- 56.2, களக்காடு- 62.4, மூலைக்கரைப்பட்டி- 55, பாளையங்கோட்டை- 54, திருநெல்வேலி- 13.4. அணைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 102.75 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 1,510 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 304 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 70.85 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,560 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 35 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் களக்காடு தலையணையில் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இங்குள்ள சுற்றுச்சூழலியல் பூங்காவை பார்வையிட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதுபோல் திருக்குறுங்குடி நம்பி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வனப்பகுதியில் அமைந்துள்ள நம்பி கோயிலுக்கு செல்லவும், ஆற்றில் குளிக்கவும் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் நேற்று 2-வது நாளாக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. நேற்று மழையின் தீவிரம் குறைந்து வெயில் காணப்பட்டது.

நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 12 மி.மீ., ஆய்க்குடியில் 4 மி.மீ., தென்காசி, கடைய நல்லூரில் தலா 2 மி.மீ., கருப்பாநதி அணை, குண்டாறு அணை, அடவிநயினார் அணை, செங்கோட்டை, சங்கரன்கோவிலில் தலா 1 மி.மீ. மழை பதிவானது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து நன்றாக இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE