சென்னை: "ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றினால்தான், அனைவருக்கும் கல்வி, உயர் கல்வி என்ற இலக்கை மாநிலங்களை எட்ட முடியும். நான் தமிழகத்துக்காக மட்டும் இதைக் கூறவில்லை, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் கூறுகிறேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் அந்த விழாவில் பேசியதாவது: "இசைக்கும், என் குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உண்டு. என்னுடைய தாத்தா முத்துவேலர் பாட்டு எழுதுவதில் மட்டுமல்ல, பாட்டு பாடுவதிலும் வல்லவர். அதேபோலதான், தலைவர் கருணாநிதியும் கவிதைகள் மட்டுமல்ல, நிறைய சினிமா பாடல்களை கூட எழுதி இருக்கிறார். அவர் பாட்டு பாடுவது இல்லையே தவிர, அனைத்து இசை நுணுக்கங்களும் அவருக்கு நன்றாக தெரியும். இசையை கேட்டவுடனே, அதில் சரி எது, தவறு எது என்று சொல்லிவிடுவார். அந்தளவுக்கு வல்லமை பெற்றிருந்தார்.
அடுத்து, 'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே' உள்ளிட்ட பாடல்களை பாடியது என்னுடைய மாமா ‘தமிழிசைச் சித்தர்’ சிதம்பரம் ஜெயராமன். அந்த வகையில் எனக்கு இசையோடு நெருங்கிய உறவு இருக்கிறது. இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை, இந்தப் பல்கலைக்கழகத்துக்குத்தான் உண்டு. முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியும் செயல்படும் பல்கலைக்கழகமாக இந்த பல்கலைக் கழகம் இருக்கிறது.
அதைவிட சிறப்பு என்னவென்றால், இந்தப் பல்கலைக் கழகத்துக்குத்தான், மாநிலத்தை ஆளுகின்ற முதல்வரே வேந்தராக இருக்கின்ற உரிமை இருக்கிறது. அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்ததைதான் பேசுகிறேன். இப்படி முதல்வர்களே வேந்தர்களாக இருந்தால்தான், பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும்; வளரும். மற்றவர்கள் கையில் இருந்தால், அதனுடைய நோக்கமே சிதைந்து போய்விடும் என்று நினைத்துத்தான், 2013-ம் ஆண்டே இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதலமைச்சர்தான் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்திருந்தார். இதற்காக அவரை மனதார நாம் பாராட்டலாம். இப்போது இருக்கக்கூடிய நிலையை நினைத்து நானும் மனமுவந்து பாராட்டுகிறேன்.
இன்றைக்கு இசைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், பத்மபூஷன் பி.சுசீலா, பி.எம். சுந்தரம் என இரண்டு இசை மேதைகளுக்கு டாக்டோரேட் பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறோம். இதன் மூலமாக, டாக்டர் பட்டமும் பெருமை அடைகின்றது. பாடகி சுசீலா அவர்களுடைய குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். அவருடைய பாட்டை நான் எப்போதுமே வெளியூருக்கு இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது காரில் பாட்டைக் கேட்டுக்கொண்டே போவேன். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, அடிக்கடி நான் பல இடங்களில் அதை பாடியிருக்கிறேன். “நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை; உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை; காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை; உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை”. அதனால் மேடைக்கு வந்தவுடனே அம்மையாரை பார்த்தவுடன் வணக்கம் சொல்லிவிட்டுதான், நான் உங்கள் ரசிகன் என்று சொன்னேன். வெளிப்படையாகவே சொன்னேன்.
இந்த இரண்டு மேசை மேதைகளுக்கு டாக்டோரேட் பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறோம். இதன் மூலமாக டாக்டோரேட் பட்டமும் பெருமை அடைகிறது. பாடகி சுசீலா அவர்களுடைய குரலில் மயங்காதவர்களே நிச்சயமாக இருக்கவே இருக்க முடியாது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அப்படிப்பட்ட புகழைப் பெற்ற பாடகி அவர்.அதேபோல், இசையில் அறிஞர் பி.எம்.சுந்தரம். பன்முகத் திறமை கொண்டவர். மிகப் பெரிய இசை மரபில் பிறந்து, இசைத் துறைக்கு அரிய தொண்டாற்றி வருபவர். மங்கல இசை மன்னர்கள், மரபு தந்த மாணிக்கங்கள் போன்ற இசைத் துறையில் முக்கியமான நூல்களை படைத்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக தலைவர் கருணாநிதியின் மனதில் இடம் பிடித்தவர். இன்னும் சொல்லப்போனால், நம்முடைய தஞ்சை மண்ணைச் சார்ந்தவர். இப்படிப்பட்ட இசைவாணர்களுக்கு இன்றைக்கு நாம் பெருமை செய்திருக்கிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினுடைய முதல்வரான நான் இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருப்பதால்தான் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கின்ற வகையில் இது போன்ற முடிவுகளை எடுக்கமுடிகிறது. அதனால் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதல்வரே இருக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம். அதற்காக சட்ட முன்வடிவுகளையும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறோம். இது தொடர்பான சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகின்றது. நல்ல செய்தி வரும். வரும் என்று எதிர்பார்ப்போம். வரவேண்டும் என்று எதிர்போர்ப்போம்.
செய்திகளில் பார்த்திருப்பீர்கள், நாளிதழில் படித்திருப்பீர்கள். மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையில், நேற்றைய தினம், நீதிபதிகள் கருத்துக்களை அதில் சொல்லியிருக்கிறார்கள். ஒத்திசைவு பட்டியலில் இருப்பதை கல்வி மானிய பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும். இப்படி மாற்றினார்தான் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர்கல்வி என்ற இலக்கை மாநிலங்கள் எட்டமுடியும். நான் தமிழ்நாட்டுக்காக மட்டும் இப்படி சொல்லவில்லை. இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களை சேர்த்துத்தான் சொல்கிறேன். நான் அடிக்கடி சொல்வதுபோல, கல்வி தான் ஒருவருடைய நியாயமான சொத்து. அந்த கல்வி எல்லோருக்கும் கிடைக்கவேண்டும். அதற்கு எந்த தடையும் இருக்க கூடாது என்பதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை.
நலிந்த நிலையில் இருக்கின்ற மரபுவழிக் கலைகள், பண்டைய தமிழ்ப் பண்பாட்டை பிரதிபலிக்கின்ற கலைகள், அந்தக் கலைகளை உயிர்ப்பித்து, வருங்கால தலைமுறைகளுக்கு கொண்டு செல்கின்ற முயற்சிகளில் இந்தப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அதற்கான முழு ஒத்துழைப்பையும் மாநில அரசு வழங்கி வருகிறது. இன்னொரு முக்கியமான சிறப்பு என்னவென்றால், மாற்றுத் திறனாளிகள் பலர், இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் இசை மற்றும் கவின்கலைகளை பயின்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். அந்த வகையில், சமூகநீதியைக் காக்கின்ற பல்கலைக்கழகமாக இந்தப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது.
இசை, நாடகத்துறை, திரைப்படத்துறை போன்றவற்றுடன் வளர்ச்சிக்கு, முதல்வராக இருந்த நம்முடைய தலைவர் கருணாநிதியின் பங்களிப்பு மகத்தானது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக இருக்கின்ற திருவையாறு அரசு இசைக் கல்லூரியை 1997-ம் ஆண்டு தோற்றுவித்தவர் அன்றைக்கு முதல்வராக இருந்தது தலைவர் கருணாநிதிதான்.அதே ஆண்டு கிராமப்புற மாணவர்களும், இசைப் பயிற்சி பெற ஏதுவாக, 17 மாவட்டங்களில் 17 இசைப் பள்ளிகளை தோற்றுவித்தார்.
மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய “நீராரும் கடலுடுத்த” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அனைத்து அரசு விழாக்களிலும் இசைக்க வேண்டும் என்று 1970-ம் ஆண்டே அரசாணையை பிறப்பித்தவர் தலைவர் கருணாநிதி. 53 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மரபு அனைத்து அரசு விழாக்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.இதை இசைத்தட்டுகள் மூலமாக ஒலிப்பதை விட எல்லோரும் சேர்ந்து பாடவேண்டும் என்று விதிமுறை வகுத்திருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. அந்த வகையில், அரசு விழாக்களில் உங்களை போன்ற மாணவர்கள்தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடுகிறார்கள். எந்த விழாக்களாக இருந்தாலும், தமிழை வாழ்த்தித் தொடங்குகிறோம். அதே நேரத்தில், அதை இசையுடன் தொடங்குகிறோம் என்பது உங்கள் எல்லோருக்குமான பெருமை.
இசைக் கலையை சிறப்பாக வளர்த்து வரும் பல்கலைக் கழகமாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகம் அமைந்திருக்கிறது. முதன்முறையாக இந்த பட்டமளிப்பு விழாவில், ஆராய்ச்சிப் பட்டங்கள் (Ph.D) வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியான டாக்டர் எம்.ஜி.ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முதன்முறையாக B.V.A பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 3500 மாணவர்களுக்கு Ph.D, M.Phil, PG, UG, Diploma சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
நாட்டார் கலைகள், வில்லுப்பாட்டு, சவுண்ட் இன்ஜினியரிங், மியூசிக் தெரபி மற்றும் வாய்ஸ் ரிலேட்டட் கோர்ஸ்கள் என்று புதுமையான படிப்புகள் தொடங்கப்பட்டிருக்கிறது. Indian Theatre Arts for Integrated Development என்ற சமுதாயத்துக்கு பயனளிக்கும் படிப்பு தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளின் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் உருவாகும். மாணவர்கள் தற்போது மார்கழி இசை விழாக்கள் மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்கின்ற வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இசையை படிப்பாக மட்டும் வழங்காமல், இசைக்கலையை வளர்க்கின்ற பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருவது பாராட்ட வேண்டிய ஒன்று. இசைப் பல்கலைக்கழகத்தின் உண்மையான நோக்கம் இதுதான்.கலை, இலக்கியம் என்பது பழைய பெருமைகள் இல்லை; எதிர்காலத் தேவைகள். தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள். இயல், இசை, நாடகத்தை காப்பாற்றுவது என்பது தமிழைக் காப்பாற்றுவது! தமிழினத்தைக் காப்பாற்றுவது! அந்த வகையில், தமிழ் இசைக்கும், தமிழ்ப் பாடல்களுக்கும் எல்லோரும் அதிக முக்கியத்துவம் தரவேண்டும்; அதற்கு இசைப் பல்கலைக்கழகம் ஊக்கமளிக்க வேண்டும்.
பழந்தமிழ் இசை நூல்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். புதிய இசை நூல்கள் எழுதப்படவேண்டும். இதில் எல்லாம் இந்த பல்கலைக்கழகம் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.அதற்கு ஊக்கமளிக்கின்ற வகையில், இந்தத் தருணத்தில் இரண்டு அறிவிப்புகளை இங்கே நான் வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழத்துக்கான அரசு மானியம் 3 கோடி ரூபாயாக உயர்த்தி அடுத்த நிதியாண்டிலிருந்து வழங்கப்படும். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சி மையம், நூலகம் மற்றும் கற்றல் மேலாண்மை அமைப்புமுறை அமைக்க 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago