நேரு குறித்து ராமதாஸ் கூறியது ஆதாரமற்றது: காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘அரசியலமைப்பு சட்டத் திருத்த அறிக்கையை குப்பை கூடையில் எறியுங்கள்’ என்று நேரு கூறியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருப்பது ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்ட கருத்து என காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தேசிய அளவில் அமைக்கப்பட்ட ‘இண்டியா’ கூட்டணியை மேலும் வலிமையாக்கி, செழுமையாக்குவது ஒவ்வொரு மாவட்ட தலைவர்களின் கடமை. வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்கும் பணியை டிசம்பர் இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தி, அவர்களுக்கான பயிற்சி கூட்டங்களை ஜனவரிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

தமிழக ஆளுநரின் காழ்ப்புணர்ச்சி அரசியலை முறியடிக்க, திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும்.

பிராமணர் இடஒதுக்கீடு: நாட்டின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் காலேல்கர், சமூகநீதிக்கான அரசியலமைப்பு சட்ட முதல் திருத்தத்துக்கான அறிக்கையை பிரதமர் நேருவிடம் கொடுத்தபோது, இதில் பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று கூறி, அந்த அறிக்கையை குப்பை கூடையில் தூக்கி எறியுங்கள் என்று நேரு கூறியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்ட அவரது கருத்துக்கு வன்மையான கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

கிராமந்தோறும் பிரச்சாரம்: மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல் முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியல், விவசாயிகள் விரோதப் போக்கு, பிரதமரின் அதிகார குவியல், கூட்டாட்சிக்கு குந்தகம் விளைவிப்பது, அதானி, அம்பானி உள்ளிட்ட சில தொழிலதிபர்களின் சொத்துக் குவிப்புக்கு துணைபோவது, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை குவிப்பது உள்ளிட்டவை குறித்து ஆதாரத்துடன் பட்டியலிட்டு, பாஜக ஆட்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரித்து டிசம்பரில் வெளியிடப்படும். இதைக் கொண்டு கிராமந்தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் கட்சியின் மாநில துணை தலைவர்கள் உ.பலராமன், கோபண்ணா, எம்எல்ஏ பழனி நாடார், எஸ்.சி. அணி தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு, எம்.ஏ.முத்தழகன், அடையாறு டி.துரை, பொதுச் செயலாளர் பி.வி.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE