தரங்கம்பாடி அருகே சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கடக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையாம்பட்டினம் கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தார் சாலை கோடங்குடி ஊராட்சியையும் கிளியனூரையும் இணைக்கும் வகையில் உள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், ஏற்கெனவே சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த சாலை, தற்போது சேறு, சகதியாக காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கக் கூடிய மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்கள் நாள்தோறும் சிரமத்துக் குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை சீரமைக்கப்படாததால், நேற்று சேறு, சக்தியான சாலையில் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியது: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட, ஒரு கி.மீட்டர் தொலைவுக்கான இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாகவும், ஜல்லிகள் பெயர்ந்தும், மழைநீர் தேங்கி சகதியாகவும் காணப்படுகிறது. கிளியனூரில் உள்ள பள்ளிக்கும், அரசு மருத்துவமனைக்கும் இந்த சாலையை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

அவசர சூழலில் ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளது. பலமுறை மனுக்கள் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டோம், இனியும் சாலை சீரமைக்கப் படாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE