வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் வட கடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: "அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது" என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தமிழக கடற்கரைப் பகுதியிலும், அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் பகுதியில் மற்றுமொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. 11 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்துவரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்துவரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை ஏதுமில்லை.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரையில், பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் சற்று பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளது. வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 25 செ.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு 30 செ.மீ. இது இயல்பைவிட 16 சதவீதம் குறைவு" என்று அவர் கூறினார்.

இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.20) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ.21 ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவ.22 ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவ.23 ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவ.24 ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவ.25 ஆம் தேதி மற்றும் நவ.26 ஆம் தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்