“சொன்னதை செய்யவில்லை” - கரோனாவால் இறந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை வழங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘நவம்பர் 22-ம் தேதியுடன், கரோனா பாதிப்பால் மருத்துவர் விவேகானந்தன் உயிரிழந்து 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா பரவல் தொடங்கியபோது அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட வளர்ந்த நாடுகளே திணறின. மேலும் கரோனா தொற்றை எப்படி எதிர்கொள்வது என்பது உலகம் முழுவதும் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.குறிப்பாக தமிழகத்தில் கரோனா முதல் அலையின்போது, பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. அப்போது நெருக்கடியில் இருந்த மக்களுக்கு அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவர்களுமே வரப்பிரசாதமாக இருந்ததை யாருமே மறக்க முடியாது.

கரோனாவால் மருத்துவர்கள் உயிரிழந்தபோதும், தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என தெரிந்தும், ஒவ்வொரு மருத்துவரும் அர்ப்பணிப்போடு பணி செய்தோம். அதாவது கரோனா பரவலின் போது தமிழகத்தின் பலமாக இருந்தது 19 ஆயிரம் அரசு மருத்துவர்கள்தான் என பேசப்பட்டது. கரோனாவின்போது பணியாற்றும் மருத்துவர்களுக்கு, ராணுவ வீரர்களுக்கு இணையான மரியாதை தரப்படும் என அன்று அறிவித்தார்கள். ஆனால், கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்துக்கு, மாநில அரசு 10 காசு கூட நிவாரணம் தரவில்லை.

மேலும், கரோனா முதல் அலையில் பணியாற்றியபோது தொற்று ஏற்பட்டு உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் குடும்பம் ஏழ்மையில் வாடுகிறது. விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை தரப்படும் என உறுதியளித்த சுகாதாரத் துறை அமைச்சர் இன்று வரை சொன்னதை செய்யவில்லை. தனக்கு அரசு வேலை தரப்பட வேண்டும் என விவேகானந்தன் மனைவி கண்ணீருடன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும், முதல்வரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.

இந்த ஆட்சியில் உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு புதுமை பெண்கள் திட்டம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டம் என பெண்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் திட்டங்கள் கொண்டு வந்துள்ளதாக முதல்வர் பெருமையாக தெரிவிக்கிறார். அதேநேரத்தில் இங்கு ஒரு பெண், அதுவும் கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவரின் மனைவி, தன்னுடைய குழந்தைகளுடன் அரசு வேலை கேட்டு, கண்ணீர் விடுவது, தமிழக முதல்வரின் கவனத்துக்கு இதுவரை கொண்டு செல்லப்படவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.

இதற்கிடையே, பணியின்போது இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கேட்டு, மதுரை உயர்நீ திமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் இரண்டு தினங்களுக்கு முன்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி பட்டு தேவானந்து அளித்த தீர்ப்பில், கருணை வேலை என்பது பணியின் போது இறந்த ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கும் சமூக பாதுகாப்பு நடவடிக்கை ஆகும். மனுதாரரின் மகனுக்கு 6 வாரத்துக்குள் கருணை வேலை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். அதுவும் இங்கு கரோனா பேரிடரில் உயிரிழந்துள்ளதற்கு சிறப்பு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஏற்கெனவே மது போதையில் இருந்து மீள்பவர்களுக்கு, தகுதிக்கேற்ற அரசு வேலை தரப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டதையும் இந்த நேரத்தில் நினைத்து பார்க்க வேண்டும்.

எனவே, வருகின்ற 22 -ம் தேதி தன் கணவனை கரோனாவுக்கு எதிரான போரில் பலி கொடுத்து, மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் , மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை தன் கைகளால் தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் எத்தகைய அசாதாரண சூழ்நிலையிலும், அரசுக்கு உறுதுணையாக இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE