55 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் 55 இடங்களில்நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்எஸ்எஸ் இயக்கம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. எனவே, ஆர்எஸ்எஸ் இயக்கம் உயர் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும்55 இடங்களில் நேற்று மாலைஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னையில் மணலி, கொரட்டூர், குரோம்பேட்டை ஆகிய3 இடங்களில் அணிவகுப்பு பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. சென்னை கொரட்டூரில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியில், அம்பத்தூர், வடபழனி மாவட்ட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சீருடை அணிந்து பங்கேற்றனர். இவர்கள் டாக்டர் நல்லிகுப்புசுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளி வாயிலில் ஆர்.எஸ்.எஸ் கொடியேற்றினர்.

தொடர்ந்து உறுதிமொழியேற்ற அவர்கள், மேளதாளம் முழங்க அணிவகுத்து சென்றனர். கொரட்டூர் மத்திய நிழற்சாலை, பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அதே இடத்துக்கு வந்தடைந்தனர். சுமார் 3 கி.மீதூரம் பேரணிக்கு பிறகு பள்ளிவளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தக்‌ஷிண சேஷத்ர ஸம்பர்க ப்ரமுக்தென் பாரத மக்கள் தொடர்பாளர் பி.பிரகாஷ், தமிழ் சேவா சங்கத்தின் அறங்காவலர் சே.சிவகுரு, அகில இந்திய நாடார் கூட்டமைப்பு மாநில கல்விக் குழு தலைவர் பிரபாகரன், தேசிய யாதவ மஹாசபா மாநில செயலாளர் குணசீலன், ரெட்டி நல சங்கத்தின் அலுவலக செயலாளர் செல்வராஜ், பாரம்பரிய ஸ்தபதிகள் சிற்ப கலைஞர்கள் சங்க செயலாளர் சுந்தர மூர்த்தி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, உடன்குடி, தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே கூனாலுமூடு, தக்கலை அருகே திக்கணங்கோடு ஆகிய இடங்களிலும், கோவை மாவட்டத்தில் துடியலூர், பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் ஆகிய 2 இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல்,திருப்பூரில் உடுமலை, நீலகிரியில் கோத்தகிரி, சேலத்தில் மரவனேரி, நாமக்கலில் திருச்செங்கோட்டிலும் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருநகரில் ஆர்எஸ்எஸ் இணைச் செயலாளர் ராஜசேகர், மேலூரில் மாவட்டச்செயலாளர் சேதுராமன் தலைமையிலும் பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு வில்லிபுத்தூர் சடகோப ராஜமானுஜ ஜீயர், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவையில் நடைபெற்ற பேரணியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பாஜக மாநில துணை தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொருளாளர் எஸ்ஆர்.சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ்அணிவகுப்பில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் திரளானோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஓசூர், தருமபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூரில் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தது.தமிழகம் முழுவதும் 55 இடங்களில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.இந்த பேரணியில் அந்தந்தபகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தலைமை தாங்கினர். அதேபோல், குழந்தைகள் பலரும் சீருடைஅணிந்து பேரணியில் கலந்துகொண்டனர். திருச்சியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்க வந்த பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர்இப்ராகிமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்தனர். பேரணி நடைபெற்ற இடங்களில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE