“உதயநிதியை முதல்வராக்கும் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது” - தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: உதயநிதியை தமிழக முதல்வராக்கும் திட்டம் ஒருபோதும் நடக்காது என தருமபுரியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

தருமபுரி மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் இல்லத் திருமணம் மற்றும் 100 இணையருக்கு இலவச திருமணம் இன்று (நவ.19) தருமபுரி அடுத்த குண்டலப்பட்டியில் ஸ்ரீரங்கநாதன் ரஞ்சிதம் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்வில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி திருமணங்களை நடத்தி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்:"இன்று நடந்த மணவிழாவில் மணம் முடித்துக் கொண்ட தம்பதியர் அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும். அதிமுக ஒரு குடும்பம் என்பதற்கு இந்நிகழ்ச்சியே சான்று. இதுபோன்ற நிகழ்வுகள் அதிமுகவில் மட்டுமே நிகழும். அதேபோல, அதிமுக சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி.அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டத்தை தெளிவாக அறிவித்து விட்டோம். இதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர் எதையெல்லாமோ பேசி வருகின்றனர். மீண்டும் தெரிவிக்கிறேன், அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அந்த கட்சியினர் தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். சிறுபான்மையினர் வாக்குகளை ஏமாற்றி பெற்று வந்த திமுகவுக்கு இனி முழுமையாக அந்த வாக்குகள் கிடைக்காது என்ற அச்சம் வந்து விட்டது.

ஏழைப் பெண்களின் திருமணம் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் 12 லட்சம் குடும்பத்தினர் பயனடைந்தனர். ஆனால், இந்த திமுக அரசின் பொம்மை முதல்வர் அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார். கருவுற்ற பெண்களுகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், அம்மா குழந்தைகள் பெட்டகம், ஏழை மக்களின் வசதிக்காக 2,000 மினி கிளினிக்குகள், பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் ஆகிய திட்டங்களையும் நிறுத்தி விட்டனர்.

நீட் தேர்வு பற்றி முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் பேசி வருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த காந்திச்செல்வன் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தபோது தான் நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. காங்கிரஸும், திமுகவும் இணைந்து கொண்டுவந்த நீட் தேர்வை தற்போது எதிர்ப்பதும் அவ்விரு கட்சிகளும் தான்.தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குற்றச் செயல்களும் அதிக அளவில் நடந்து வருகிறது. திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் இருந்தன. அவற்றில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 100 சதவீதம் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் பச்சைப் பொய் பேசி வருகிறார். அனைத்து பெண்களுக்கும் மாதம் 1,000 வழங்கப்படும் என்று கூறிவிட்டு தற்போது, தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே கொடுப்பேன் என்கிறார். அதுவும்கூட முழுமையாக பலருக்கு சென்று சேரவில்லை.

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ, மாணவியரின் மருத்துவர் கனவை நிறைவேற்றும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தால் சுமார் 2,000 மாணவ, மாணவியர் மருத்துவம் படித்து வருகின்றனர். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்தியது. இவ்வாறு ஏழைகளின் ஏற்றத்துக்கான திட்டங்களை கொண்டு வந்தது தான் அதிமுக அரசு.

அதேபோல, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் விழாவின்போது அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் உருகும் வெல்லத்தை கொடுத்தனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு என்ற பெயரில் பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்களின் உரிமைக்காக நேர்மையாக போராடும் விவசாயிகள் மீது குண்டர் சட்ட வழக்கு போடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக் கொண்டு அதை என்ன செய்வதென தெரியாமல் அக்கட்சி தலைமை தவிக்கிறது என கூறியிருந்தார். இவையெல்லாம், திமுக ஊழல் செய்வதற்காகவே ஆட்சிக்கு வந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. வரவிருக்கும் மக்களவை தேர்தலில் இதற்கெல்லாம் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

மன்னராட்சி முறையைப் போல, திமுக கட்சியினர் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர். கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின். தற்போது ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதியை முதலமைச்சராக்க திட்டமிட்டு வருகின்றனர். ஒருபோதும் இது நடக்காது. திமுகவில் கட்சி முன்னோடிகளுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பில்லை. அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும், என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், என்.ஆர்.சிவபதி, எம்.சி.சம்பத், தளவாய் சுந்தரம், வீரமணி, முல்லைவேந்தன், பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE