சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் மறு ஆய்வு செய்து நிறைவேற்றிட வகை செய்யும் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக ஆளுநரால் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப் பெற்ற சட்ட மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் மறு ஆய்வு செய்து நிறைவேற்றிடும் அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் தனது உரையில், “தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் - தமிழ்நாட்டை வளப்படுத்தும் திட்டங்களாக மட்டுமல்ல, இந்தியாவுக்கான வழிகாட்டும் திட்டங்களாக அமைந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையைக் கெடுக்கும் வகையில் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தடுக்கும் வகையில் சில இடையூறுகள் இருக்கின்றன என்பதையும் இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். நிதி நெருக்கடி, ஒன்றிய அரசின் சில இடையூறுகள் இவை மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை எங்களால் செய்து காட்ட முடியும் என்று இதே மாமன்றத்தில் ஓராண்டுக்கு முன்னதாக நான் குறிப்பிட்டதையும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
இடையூறுகள் என்று நான் சொன்னதன் விளைவாகத்தான் இந்தச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதாக உள்ளது. பொதுவாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டங்கள், முக்கிய நிகழ்வுகளுக்காகவும், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காகவும் கூட்டப்படுவது வழக்கம். அதேபோல் நாம் இன்றைக்கு கூட்டியிருக்கும் சிறப்புக் கூட்டம், அவசர, அவசியம் கருதி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தின் அடிப்படையிலும், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியும் கூட்டப்பட்டுள்ளது.
மக்களாட்சித் தத்துவத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்தச் சட்டமன்றப் பேரவையில் நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார் ஆளுநர். “I withhold assent” அதாவது, தான் அனுமதியை நிறுத்திவைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, நாம் இங்கு நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுகளை கடந்த 13.11.2023 அன்று திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளை நாம் இங்கே மீண்டும் நிறைவேற்றி, அவரது ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்க இருக்கிறோம். அதற்காகத்தான் இன்றைக்கு இந்தச் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
» “சட்டப்பேரவையை பொதுக்கூட்ட மேடையாக்கக் கூடாது” - பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேச்சு
» பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிப்ரவரியில் பிரதமர் திறக்கிறார்: ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்
மக்களாட்சித் தத்துவத்தின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மைமிக்க ஓர் அரசால், மாநில நலன் கருதி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் கடமை. அவருக்கு அதில் சட்டரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக ஏதேனும் தெளிவுரை தேவைப்பட்டால், அதனை அவர் அரசிடம் கோரலாம். அதனை அரசு வழங்க வேண்டும். அந்த வகையில் இதற்கு முந்தைய சில நிகழ்வுகளில் அவர் எழுப்பிய சில வினாக்களுக்கு முறையாக எழுத்து மூலமாகவும், சம்மந்தப்பட்ட அரசு செயலர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரிலும் விளக்கம் அளித்துள்ளனர்.
எந்த ஒரு நிகழ்விலும் அவர் கோரிய விளக்கங்கள் அவருக்கு வழங்கப்படாமல் இருந்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் அவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சில சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல் திருப்பி அனுப்பி வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும், இந்தச் சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கின்றார் என்றுதான் பொருளாகும். 10 சட்ட முன்வடிவுகள் உள்ளிட்ட 12 சட்ட முன்வடிவுகள் மற்றும் வேறு சில கோப்புகளுக்கும் இவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம் ஆகும். ஜனநாயக விரோதம் ஆகும். மக்கள் விரோதம் ஆகும். மனச்சாட்சி விரோதம் ஆகும். அனைத்திற்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும்.
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருப்பவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒன்றிய அரசிடம் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கித் தருவதற்கு முயற்சிக்கலாம்; ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையைப் பெற்றுத்தரலாம்; எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை வாங்கித் தரலாம்; புதிய ரயில்வே திட்டங்களைப் பெற்றுத் தரலாம்; மாநில ஆட்சிக்கும், ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஆனால், இதில் எதையும் செய்யாமல், மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார்.
அதோடு, தினந்தோறும் யாரையாவது கூட்டிவைத்துக் கொண்டு அவர் வகுப்பு எடுக்கிறார். வகுப்பு எடுக்கட்டும், தவறில்லை. அதில் மொத்தமும் தவறான பாடங்களைச் சொல்லித்தந்து கொண்டு இருக்கிறார். விழாக்களுக்குச் செல்கிறார். செல்லட்டும்! ஆனால் விதண்டாவாதக் கருத்துகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விளக்கம் அளிப்பதும் - விவாதம் செய்வதும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிடக் கொள்கை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது.
பொதுமேடைகளில் அவர் நமது தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்பிற்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். தெரிவித்துக் கொண்டும் வருகிறார். அவரது அபத்தமான கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மறுப்பு செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார்கள். அவர் தெரிவிக்கும் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குமான பிரச்சினை என்பது நாம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களில் மட்டுமல்ல; சமூக நீதியாகவும் இருக்கிறது. அதனால்தான் முடிந்தளவு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அவருக்கு முடிந்த வரை - அனைத்து வகையிலும் நாம் உணர்த்திக் கொண்டு வருகிறோம். தமிழ்நாடு வளர்ந்திருப்பதை - வளர்வதைக் காணப் பொறுக்காத காரணத்தினால்தான் என்னவோ, ஆளுநர் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார் என்று நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.
“அரசியல் சட்டத்திற்கு முழுவதும் மாறாக, அரசுடன் ஆளுநர் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். எனவே, அவருக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்” என்று இந்தியக் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து இக்கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தியுள்ளார்கள். நானும் இந்திய பிரதமருக்கு இப்பிரச்சினை குறித்து கடிதமும் எழுதியிருக்கிறேன். இந்த அனைத்து முயற்சிகளும் எவ்வித பயனும் தராததால்தான், தமிழ்நாடு அரசு மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஆளுநரிடம் தேங்கிக் கிடக்கும் அனைத்துக் கோப்புகள், சட்டமுன்வடிவுகள் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாடு அரசு எடுத்துரைத்த வாதங்களைக் கவனித்துக் கேட்ட உச்ச நீதிமன்றம், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த கருத்துகள், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் இத்தருணத்தில், ஆளுநர் அவசர அவசரமாக 10 சட்ட முன்வடிவுகளுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல், கடந்த 13-11-2023 அன்று கோப்புகளைத் திருப்பி அனுப்பியுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குத்தான் முழு அதிகாரமும் முதன்மையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-இன்படி, இந்தச் சட்டமுன்வடிவுகளை மீண்டும் பரிசீலித்து, ஆளுநருக்குத் திருப்பி அனுப்பி வைக்கும் அதிகாரம் இந்த மாமன்றத்திற்குத்தான் உள்ளது. அந்த அடிப்படையில்தான், இந்த 10 சட்டமுன்வடிவுகளும் இன்றைக்கு உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடித் திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் எண்ணங்களில் இடம் பிடித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசு. இதனை அரசியல் ரீதியாக சகித்து கொள்ள இயலாத சிலர், அரசு நிர்வாகத்தை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலமாக அரசியல் செய்ய விரும்புகிறார்கள். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும் - அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியதுதான் மரபு ஆகும்.
பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். இப்போது உச்ச நீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டு வைத்தவுடன் அவசர அவரமாக கோப்புகளைத் திருப்பி அனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகம் ஆடுகின்றார் ஆளுநர். அவருக்கு தெரிந்ததை அவர் செய்கிறார். செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் நாம் எப்போதும் சட்டத்தின் வழி நடப்பவர்கள். எனவே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-இன்படி அவர் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ள 10 சட்டமுன்வடிவுகளையும் நிறைவேற்றித் தருமாறு நூற்றாண்டு கண்ட இச்சிறப்புமிக்க சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்களை தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன். தலைவர் கருணாநீதி சொல்லியபடி, மக்களுக்கும் மனசாட்சிக்கும் மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதையும் பதிவு செய்து, பின்வரும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
அரசினர் தனித் தீர்மானம்: “பதினைந்தாவது சட்டமன்றப் பேரவையில் ஆய்வுசெய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 2 சட்டமுன்வடிவுகள், பதினாறாவது சட்டமன்றப் பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 8 சட்டமுன்வடிவுகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நெடுநாட்கள் நிலுவையில் வைத்திருந்து, கடந்த 13.11.2023 அன்று எவ்வித காரணமும் குறிப்பிடாமல், ஏற்பிசை அளிப்பதை நிறுத்திவைப்பதாக (I withhold Assent) சட்டமுன்வடிவுகளில் குறிப்பிட்டு ஆளுநர் அச்சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளார். காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் ஏற்பிசை அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்து, சட்டமுன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையதல்ல என இப்பேரவை கருதுகிறது. இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 200-ன் வரம்புரையின்கீழ், மேற்காணும் சட்டமுன்வடிவுகள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு ஏற்பிசைவு அளித்திட வேண்டும் என்பதை அவை கவனத்தில் கொள்கிறது.
ஆகிய சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 143-ன் கீழ் இப்பேரவை மறு ஆய்வு செய்திட இம்மாமன்றம் தீர்மானிக்கிறது எனும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதைத் தொடர்ந்து, ஆளுநரை விமர்சிக்காமல், தனிப்பட்ட விமர்சனங்களைக் கூறாமல் தீர்மானத்தின் மீது பேசலாம் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு அனுமதியளித்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் எஸ்.வேல்முருகன், கொமதேக-வின் ஈஸ்வரன், மமகவின் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ.க்கள் என அனைவரும் முதல்வரின் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.
வெளிநடப்பு: இதனிடையே, ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதை ரத்து செய்ததைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தனித் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே அவையிலிருந்து அவர்கள் வெளியேறினர். அதேபோல், தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது.
முன்னதாக, சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், “சட்டமன்றம் மிகப் பெரிய மாண்பும், மரபும் மிக்கது. இதனை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக் கூடாது. கருத்து வேறுபாடு பல இருக்கலாம். வேந்தர்களை நியமனம் செய்வதில் ஆளுநர்களுக்குத்தான் அதிகாரம் வேண்டும் என்று, இதே சபையில் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், இன்று தீர்மானம் வேறுவிதமாக இருக்கிறது. இது சட்டமன்றத்துக்கு முரண்பாடாக இருப்பதாக நான் கருதுகிறேன். துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்று அரசியல் சாசனமே சொல்கிறது” என்றார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அப்போதெல்லாம் ஆளுநர் அரசுடன் பேசிதான் துணை வேந்தர்களை நியமிப்பார். ஆனால், இப்போது அப்படியல்ல. அதனால்தான் இதை தற்போது கடுமையாக எதிர்க்கிறோம்” என்று கூறினார்.
பின்னர் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து. சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, அவை கூடியவுடன் மறைந்த முக்கியப் பிரமுகர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அவை உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago