அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னை கிண்டியில் செய்தியாளர்களை இன்று (நவ.18) காலை சந்தித்தார். அப்போது அவர், "உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த செமஸ்டரில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அமல்படுத்த அமைச்சர் அறிவுறுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனவே நடப்பு செமஸ்டரில் மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம், கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் மாணவர்களிடம் திருப்பி அளிக்கப்படும். மேலும், அமைச்சரின் உத்தரவு தொடர்பாக சிண்டிகேட் உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்படும். பொதுவாக கட்டணத்தை 100% உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் 9 ஆண்டுகளுக்குப் பின் 50% மட்டுமே உயர்த்தியுள்ளோம். தேர்வுத் தாள் திருத்தும் பணிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் இக்கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அது நிறுத்திவைக்கப்படுகிறது." என்று கூறினார்.

கட்டண உயர்வு விவரம்: முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50 விழுக்காடும், ப்ராஜெக்ட் கட்டணம் 100 விழுக்காடும் உயர்த்தப்பட்டது. இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து ரூ.225 ஆகவும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.450லிருந்து 650 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதுதவிர ப்ராஜெக்ட் கட்டணம் இளநிலை மாணவர்களுக்கு 300 ரூபாயிலிருந்து ரூ.600 ஆகவும், முதுநிலை மாணவர்களுக்கு ரூ.600 லிருந்து ரூ.900 ஆகவும் உயர்த்தப்பட்டது. பட்டச் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தக் கட்டண உயர்வு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

அமைச்சர் விளக்கம்: இந்நிலையில் நேற்று (வெள்ளி) செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, "பொதுவாக பல்கலைக்கழகங்களில் அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வுக் கட்டணம் என்பது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என ஏற்கெனவே முடிவு எடுத்தோம். எனவே, ஒரே மாதிரியாக தேர்வுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் கூட்டத்தில் அறிவித்திருந்தோம்.

அதன் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பாடத்துக்கு ரூ.150-ஆக இருந்த தேர்வுக் கட்டணத்தை, ரூ.225-ஆக உயர்த்தியுள்ளனர். மற்ற பல்கலைக்கழகங்களில் தேர்வுக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் குறைவாக இருப்பதால் அதனை உயர்த்துவதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறியிருந்தனர். ஆனால், இந்த செமஸ்டருக்கு தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படாது.

வருங்காலத்தில், அனைத்து துணைவேந்தர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களை அழைத்துப் பேசி அடுத்த ஆண்டில் இருந்து ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கலந்துரையாடி முடிவெடுக்கப்படும். எனவே, இந்த செமஸ்டருக்கு கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படாது" என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்