மிதிலி புயல் காரணமாக தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிதிலி’ புயலால் தமிழக துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கடந்த செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இதற்கு `மிதிலி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நேற்று மிதிலி புயல் ஒடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திகாவிலிருந்து தென்கிழக்கே 200 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கெபுபாராவிலிருந்து தென்மேற்கே 220 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இந்நிலையில், மிதிலி புயல் இன்று (சனிக்கிழமை) காலை வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நேற்று தமிழக துறைமுகங்களில் பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப் பட்டினம், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் கரையோரங்களில் மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு மீன்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE