திருவண்ணாமலை: செய்யாறு அருகே மேல்மா சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து 124 நாட்களுக்கு காத்திருப்பு போராட்டத்தில் உள்ள 7 விவசாயிகளை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-வது திட்ட விரிவாக்க பணிக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் 124 நாட்களுக்கு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேல்மா கூட்டுச்சாலையில் பந்தல் அமைத்து நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாக பங்கேற்றனர். அப்போது அவர்கள், விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, காவல் துறையினர் தடையை மீறி செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 2-ம் தேதி பேரணியாக புறப்பட்டனர். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நியாய விலை கடை அட்டைகளை ஒப்படைக்க செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது, அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது, இரண்டு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். எனினும், அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற மறுத்துவிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டும் போராட்டம் தொடர்ந்தது. பின்னர், இவர்களிடம் சார் ஆட்சியர் அனாமிகா பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவரிடம் மனுவை அளித்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில், பந்தலை காவல் துறையினர் அகற்றினர். தொடர்ந்து மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என 11 வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
» “செய்யாறு விவசாயிகள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை... திமுக அரசின் கோழைத்தனம்!” - அண்ணாமலை சாடல்
மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அத்திபாடி கிராமத்தில் வசிக்கும் அருள் ஆறுமுகம் (45), விவசாயிகளான செய்யாறு வட்டம் தேத்துறை கிராமத்தில் வசிக்கும் பச்சையப்பன் (47), எருமைவெட்டி கிராமத்தில் வசிக்கும் தேவன் (45), மணிப்புரம் கிராமத்தில் வசிக்கும் சோழன் (32), மேல்மா கிராமத்தில் வசிக்கும் திருமால் (35), நர்மாபள்ளம் கிராமத்தில் வசிக்கும் மாசிலாமணி (45), குரும்பூர் கிராமத்தில் வசிக்கும் பாக்கியராஜ் (38) ஆகிய 7 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று (நவம்பர் 15-ம் தேதி) உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் உள்ள அருள் ஆறுமுகம், கோவை சிறையில் உள்ள தேவன், கடலூர் சிறையில் உள்ள சோழன், மதுரை சிறையில் உள்ள பச்சையப்பன், திருச்சி சிறையில் உள்ள திருமால், வேலூர் சிறையில் உள்ள மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோரிடம் குண்டல் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை செய்யாறு காவல்துறையினர் வழங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து செய்யாறு வட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, "தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
அதேபோல், “செய்யாறு அருகே விளைநிலங்கள் கையப்படுத்துவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago