நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை அரசுக்கே திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி - அடுத்தது என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது உள்ளிட்ட நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவரும் 10 சட்ட மசோதாக்களுக்கு அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், "தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருக்கிறார். ஆளுநரின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தமிழக அரசாணைகளுக்கும் ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். ஆளுநர் தரப்பில் ஒப்புதல் வழங்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், கோப்புகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருப்பது கவலைக்குரியது" என்று கருத்து தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். இந்த மசோதாக்கள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு ஆளுநர் கூறியிருக்கிறார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி 2023 ஜனவரி - ஏப்ரல் காலகட்டத்தில் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள்.ஊழல் விவகாரங்களில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 மே மாதம் வரை ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 4 கோப்புகள். கடந்த 2022 ஆகஸ்ட் முதல் கடந்த 2023 ஜூன் வரை 54 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள். டிஎன்பிஎஸ்சி காலியிடங்களை நிரப்புவது தொடர்பான கோப்புகள், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு கிடப்பில் உள்ள நிலையில், 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு என்ன செய்யும்? 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். எனவே, இந்த மசோதாக்களை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்ற வேண்டும். அதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை அரசு கூட்டும். அந்தக் கூட்டத்தில், இந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும். எனவே, தமிழக அரசின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் வரும் சனிக்கிழமை (நவ.18) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE