சென்னை: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர், தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: உழைக்கும் மக்களின் தோழராக வாழ்ந்த சங்கரய்யா இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் மூத்த தலைவர்களோடு பயணித்தவர். கல்லூரி பருவத்திலிருந்தே பொது வாழ்க்கைக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது மறைவு உழைக்கும் மக்களுக்கும் கம்யூனிஸ்ட் பேரியக்கத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்: மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்ந்து மறைந்த சங்கரய்யாவின் வாழ்க்கையும், தியாகமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். 2021-ல் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேரில் சென்று முதல் ‘தகைசால் தமிழர்’ விருதை அவருக்கு வழங்கியது எனக்கு கிடைத்த வாழ்நாள் பேறு. விருதோடு கிடைத்த பெருந்தொகையைகூட கரோனா நிவாரண நிதிக்காக அரசுக்கே அளித்த சங்கரய்யாவின் மாண்பால் நெகிழ்ந்து போனேன். சிறப்புகளுக்கு அவரால் சிறப்பு என்று சொல்லத்தக்க அப்பழுக்கற்ற தியாக வாழ்வுக்கு சொந்தக்காரர். சாதி, வர்க்கம், அடக்குமுறை, ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: 90 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் மிகப்பெரிய போராளியாக விளங்கியவர் சங்கரய்யா. தனி வாழ்வில் தூய்மையையும், பொதுவாழ்வில் நேர்மையையும் கடைபிடித்த அவர், பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.
» eCOM, இன்ஸ்டா இஎம்ஐ கார்டு மூலம் பஜாஜ் ஃபைனான்ஸ் கடன் வழங்குவதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு
» உலகக் கோப்பை இறுதியில் இந்தியா: நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்!
கேரள முதல்வர் பினராயி விஜயன்: பொது வாழ்க்கையில் நேர்மையாகவும், எளிமையாகவும் வாழ்ந்த மகத்தான சாதனை படைத்த ஒரு தலைவரை கம்யூனிஸ்ட் இயக்கம் இழந்துவிட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, தொழிலாளர்களின் உற்ற தோழனாக விளங்கியவர். சாதி வர்க்கம், ஆதிக்கம், அடக்குமுறைகளை தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வாழ்ந்தவர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சங்கரய்யாவுடன் நெருங்கி பழகிய அனுபவம் எனக்கும் உண்டு. அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும் பழகக்கூடியவர். சங்கரய்யாவின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: மூத்த தலைவரான சங்கரய்யா மறைவு, தமிழக அரசியலுக்கு பேரிழப்பாகும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைகுரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை சென்றவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: சிறு வயது தொடங்கி இறுதி மூச்சு வரை நெறி சார்ந்து வாழ்ந்து பொது வாழ்வுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியவையாகும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தின் மறைந்த மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களோடு இணைந்து மக்கள் பணியாற்றிய பெருமை சங்கரய்யாவை சேரும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இந்திய விடுதலை போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் என வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்தில் நின்று போராடிய லட்சிய போராளி.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தமிழ்நாட்டின் அரசியல் வரலாறாக இருந்தாலும், போராட்ட வரலாறாக இருந்தாலும் அதை சங்கரய்யாவை தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அனைத்து அரசியல் நிகழ்வுகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தவர்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: சங்கரய்யாவை, இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
விசிக தலைவர் திருமாவளவன்: காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி என தமிழ்நாட்டின் பல்வேறு மூத்த தலைவர்களோடு அரசியல் பணியாற்றியவர். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக சமரசம் இன்றிப் போராடியவர்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: ஒவ்வொரு நாளையும் எளிய மக்களின் நலனுக்காகவே செலவிட்டவர். அவரைப் பிரிந்ததில் வருந்துவது இடதுசாரி இயக்கங்கள் மாத்திரமல்ல, நாகரிக அரசியல் விரும்பும் அத்தனை இயக்கங்களும்தான்.
பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர்: “வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு'' என சட்டமன்றத்தில் உரையாற்றியவர். பொதுவாழ்வில் ஈடுபட்ட நாள் முதல் இறுதி வரை கம்யூனிசக் கொள்கைபிடிப்புடன் இருந்து பலருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், உழைப்பாளிகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவர். தன்னுடைய இறுதிக்காலம் வரை உழைக்கும் மக்களின் உற்ற தோழனாக வாழ்ந்தவர்.
உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்: மக்கள் தொண்டுக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர். இதன்மூலம் அனைவராலும் மதிக்கப்பெற்று போற்றப்பட்டவர்.
இதேபோல், திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், சமக தலைவர் சரத்குமார், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, காங்கிரஸ் சட்டப்பேரவைகுழுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், வி.கே.சசிகலா, பெருந்தலைவர் மக்கள்கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்,காமராஜர் மக்கள் கட்சி பொதுச்செயலாளர் குமரய்யா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தலைமை செயலகச் சங்கத்தினர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago