மார்க்சிஸ்ட் தலைவர் சங்கரய்யா காலமானார்: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 102. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான என்.சங்கரய்யா, சென்னை குரோம்பேட்டை நியூகாலனி 5-வது பிரதான சாலையில் வசித்து வந்தார். சளி, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 13-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு அவர் காலமானார்.

தகவல் அறிந்ததும், உடனடியாக மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், மருத்துவமனையில் இருந்துகுரோம்பேட்டையில் உள்ள இல்லத்துக்கு சங்கரய்யா உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எம்.பி. திருநாவுக்கரசர், எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, செல்வப்பெருந்தகை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிற்பகலுக்கு பிறகு, சென்னை தியாகராயர் நகர் வைத்தியராம் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், மாநில செயலாளர் பிரமிளாசம்பத், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், பாமக இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, எம்.பி.க்கள்தமிழச்சி தங்கபாண்டியன், சு.வெங்கடேசன், விஜய் வசந்த், முன்னாள் எம்.பி.டி.கே.ரெங்கராஜன், விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட தலைவர் தி.நகர்அப்புனு, ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன், ‘இந்து’ என்.ராம், நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி வரை கட்சிப் பணி: கல்லூரி படிப்பை பாதியில் துறந்து, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர் சங்கரய்யா. இடதுசாரி மாணவர் அமைப்புகள், கலை இலக்கிய அமைப்புகளை உருவாக்கியதில் முக்கியபங்காற்றியவர். இளம் வயதிலேயே ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக பணியாற்றினார்.

அகில இந்திய விவசாய சங்கத்தின் தேசியத் தலைவர்களில் மிக முக்கியமானவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது, அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு,மாநில செயற்குழு, மத்தியக் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மத்திய கட்டுப்பாட்டு குழுதலைவராகவும் செயல்பட்டார்.

1995 முதல் 2002 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றிய அவர், 3 முறைசட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். வயது முதிர்வு காரணமாக கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகி இருந்தாலும், கடைசி வரை கட்சிக்காக செயல்பட்டவர்.

சங்கரய்யாவின் மனைவி நவமணி கடந்த 2016-ம் ஆண்டு காலமாகிவிட்டார். மறைந்த சங்கரய்யாவுக்கு சந்திரசேகர், நரசிம்மன் என்ற மகன்கள், சித்ரா என்ற மகள் உள்ளனர்.

இன்று இறுதிச் சடங்கு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தகைசால் தமிழர்,முதுபெரும் பொதுவுடைமை போராளி,விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா. விடுதலைப் போராட்ட வீரராக, சட்டப்பேரவை உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக தமிழகத்துக்கு அவர் ஆற்றிய தொண்டுகளை போற்றும் விதமாக, அவரது திருஉடலுக்கு அரசுமரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்புடன் இறுதி நிகழ்வுகள்இன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். ஒரு வார காலம் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 3 நாட்கள் கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் என்று மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE