மழையால் ஏற்படும் மின் சேதாரங்களை விரைந்து சீரமைக்க 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு ரூ.4.4 கோடி: அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்படும் மின் சேதாரங்களை சீரமைக்க தமிழகத்தில் மொத்தமுள்ள 44 மின்பகிர்மான வட்டங்களுக்கும் சேர்த்து ரூ.4.4 கோடி நிதி வழங்க மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மின்சாரத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காணொலிக் காட்சி மூலமாக நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களின் தலைமைப் பொறியாளர்களுடனும் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடனும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கனமழை பெய்துவரும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள், தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக இதுவரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த 169 மின் கம்பங்கள் மற்றும் 72 மின் மாற்றிகள் சரி செய்யப்பட்டுள்ளன. கனமழை காரணமாக ஏற்படும் மின் சேதாரங்களை போர்க்கால அடிப்படையில் துரிதமாக சரி செய்வதற்காகவும், சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்காகவும், 44 மின்பகிர்மான வட்டங்களுக்கும், வட்டத்துக்கு ரூ.10 லட்சம் வீதம் ரூ.4.4 கோடி நிதியை உடனடியாக வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் சென்னை மின் பகிர்மான கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சீரான மின் விநியோகம் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநர்கள், அனைத்து தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

`புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்': தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மின்தடை, மின்விபத்து ஏற்படுவது உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக மின்வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 2,811 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இவை, தலா ஒரு உதவிப் பொறியாளரின் கீழும், செயற்பொறியாளர் தலைமையிலும் செயல்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் கைபேசி எண் வழங்கப்பட்டு, அந்தந்தப் பிரிவு அலுவலகங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் மின்தடை, மின்விபத்துக் குறித்த புகார்களை 94987 94987 என்ற மின்னகம் நுகர்சேவை மைய எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு கூறலாம். அத்துடன், செயற்பொறியாளரையும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே, மின்தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்