சங்கரய்யா மறைவு: மதுரை மவுன ஊர்வலத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்பு

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா மறைவையொட்டி, மதுரையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடந்த மவுன அஞ்சலி ஊர்வலத்தில் அனைத்துக்கட்சியினரும் பங்கேற்றனர்.

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான என்.சங்கரய்யா இன்று தனது 102 ஆவது வயதில் சென்னையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலையிலிருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது. அனைத்து கட்சியினரும் கருப்பு வில்லை அணிந்து இந்த மவுன ஊர்வலத்தில் பங்கேற்றனர். மவுன ஊர்வலம் நேதாஜி ரோடு வழியாக ஜான்சி ராணி பூங்காவில் முடிவடைந்தது. அங்கு புகழஞ்சலி கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சி மாநகர மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மதிமுக எம்எல்ஏ மு.பூமிநாதன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் தி.நாகராஜன், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ரா.விஜயராஜன், திமுக முன்னாள் எம்எல்ஏ வி.வேலுச்சாமி, முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, காங்கிரஸ் நிர்வாகி வெங்கட்ராமன், திக மாநிலப் பொருளாளர் செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம். எஸ்.முருகன், மதிமுக மாவட்டச் செயலாளர் வி.முனியசாமி, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் கதிரவன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஷேக் இப்ராஹிம், ஆதித்தமிழர் கட்சி மாநிலச் செயலாளர் குருசாமி, தமிழ் தேசிய முன்னணி மாவட்டச் செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அரசியல் கட்சியினர் என்.சங்கரய்யா பற்றி நினைவு கூர்ந்து பேசியது: “விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா, மாணவர் பருவத்திலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம், மார்க்சிஸ்ட் கட்சி உருவான காலத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். மதுரையில் கிழக்கு, மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு 3 முறை சட்டமன்ற உறுப்பினரானார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசு கொடுத்த சலுகைகளை வேண்டாம் என்றவர். சுதந்திர போராட்டததில் ஈடுபட்டு என்னுடைய கடமையை செய்தேன், அதற்காக பென்ஷன் என்று கூறிய மகத்தான தலைவர்” என்று பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE